search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

    • சென்னையில் வெப்ப காற்று வீசுகிறது. பகலில் மட்டுமின்றி மாலை 5 மணிக்கு கூட வெப்ப காற்று வீசுவதால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
    • கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் நிலவி வருவதால் 31-ந்தேதி அதி கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் இந்த ஆண்டு கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து மே மாதத்தில் உச்சத்தை தொட்டது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்ப நிலை பதிவானது.

    ஒரு சில மாவட்டங்களில் 107 டிகிரி முதல் 111 டிகிரி வரை அதிகபட்சமாக வெயில் சுட்டெரித்தது. கோடை வெயிலோடு வெப்ப அலையும் தாக்கியதால் மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    இதற்கிடையில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட 3 செல்சியஸ் டிகிரி வரை அதிகரித்தது.

    ஆனாலும் மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்ததால் வெப்பம் சற்று தணிந்தது.

    இந்த நிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் வெப்ப காற்று வீசுகிறது. பகலில் மட்டுமின்றி மாலை 5 மணிக்கு கூட வெப்ப காற்று வீசுவதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். கடல் காற்று இல்லாமல் உஷ்ணம் அதிகரித்து உள்ளது.

    இதனால் வாகனங்களில் வெளியே செல்ல முடியவில்லை. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் இன்று முடிகிறது. ஆனாலும் தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும். 31-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து பின்னர் குறையும். தென்மேற்கு பருவமழை 4 நாட்களில் தொடங்க இருப்பதால் ஜூன் 1-ந்தேதி தமிழகத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் நிலவி வருவதால் 31-ந்தேதி அதி கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×