search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உருவாகிறது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    உருவாகிறது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    • தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
    • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் அந்தமான் தீவுகளில் மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

    சென்னை:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி 26-ந்தேதி உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்மான் கடல் பகுதியில் உருவாவதற்கான சாத்திய கூறுகள் தாமதம் ஆயின. இன்று 27-ந்தேதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டது.

    சூறாவளி சுழற்சியானது தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ளது. மேலும் சராசரி கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீ. வரை சுழற்சி நீண்டுள்ளது. அதன் தாக்கத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாக வாய்ப்பு உள்ளன.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 29-ந்தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக அந்தமான் தீவுகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும். எனவே 29-ந்தேதி முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை தென்கிழக்கு வங்காள விரிகுடா, மத்திய வங்காள விரிகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேணடாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். நாளை (28-ந்தேதி) முதல் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகரில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×