search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பிளாஸ்டிக் தடையை செயல்படுத்த சென்னையில் கட்டுப்பாட்டு அறை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பிளாஸ்டிக் தடையை செயல்படுத்த சென்னையில் கட்டுப்பாட்டு அறை

    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும்.
    • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒருமுறை பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான உணவுப் பொருட்களை கட்ட உபயோபடுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மக்கோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்குப் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக் கெட்கள், பிளாஸ்டிக்காலான உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள், உற்பத்தி, சேமித்தல், விநியோகம், எடுத்து செல்லுதல், விற்பனை அல்லது விநியோகம் செய்ய 1.1.2019 முதல் தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

    இதன்படி, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவோர் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) தெரிந்து கொள்ளலாம்.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதனை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இக்கட்டுப்பாட்டு அறை அனைத்து அலுவலக நாட்களிலும் வரும் 31.7.2022 வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை தொடர்பான பல்வேறு பங்குதாரர்களால் கோரப்படும் உதவி, வழிகாட்டுதல், தெளிவுபடுத்தல் மற்றும் தகவல்களை இக்கட்டுப்பாட்டு அறை வழங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×