என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தரைமட்டமாக போகும் மாட்டான் குப்பம்
- மழை வந்து வெள்ளம் வந்தால் அரசின் முகாம்களே இவர்களுக்கு தஞ்சம்.
- கடலுக்கு அருகாமையில் எங்களுக்கு குடியிருப்புகள் தந்தால் காலி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.
கடலோடும்... கால்வாயோடும்... போராடும் வாழ்க்கையாகி விட்டது எங்கள் வாழ்க்கை என்று பரிதாபமாக புலம்புகிறார்கள் மாட்டான்குப்பத்து மீனவர்கள்.
திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் அமைந்திருக்கும் மீனவர் குப்பம். இங்கு சுங்குவார் தெரு, சிவராஜபுரம், ரோட்டரி நகர், நீலம் பாஷா தர்கா, சேப்பாக்கம் லாக் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன.
சென்னை நகரில் உருவான பழமையான குப்பங்களில் ஒன்று. 1975-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்த பகுதி 215 ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி பார்த்தால் 260 ஆண்டுகள் பழமையான குப்பம்.
ஒண்டிக்கொள்ள ஒரு குடிசை என்பது மட்டும்தான் இவர்களுக்கு அடையாளம். சரியான காற்றோட்ட மோ, வெளிச்சமோ இருக்காது. அதற்குள்தான் இவர்கள் வாழ்க்கை.
மழை வந்து வெள்ளம் வந்தால் அரசின் முகாம்களே இவர்களுக்கு தஞ்சம். வாழ கால்வாய் கரையை நம்பி இருந்தாலும் வாழ்க்கையை ஓட்டுவதற்கு கடலைத்தான் நம்பி இருக்கிறார்கள்.
அதிகாலையில் இந்த குடிசைகளுக்குள் இருந்து வெளியே வரும் ஆண்கள் ஏல... ஏலோ... ஐலசா... என்பார்களே அப்படி ஏதேனும் ஒரு பாட்டை வாயில் முணு முணுத்தபடியே கடற்கரையை நோக்கி நடக்கிறார்கள்.
கடல் மணலில் ஓய்வெடுத்து கொண்டிருந்த கட்டுமரங்களை கடலுக்குள் தள்ளி அதன் மீது துள்ளி ஏறி கடலுக்குள் பயணப்படுகிறார்கள். நடுகடலுக்கு சென்றதும் வலையை கடலில் வீசி விட்டு சிக்கும் மீன்களுக்காக காத்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு கரையை நோக்கி திரும்பும் இவர்களது வலையில் சிக்கும் மீன்கள் மட்டும்தான் இவர்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிப்பவை.
வாழ்க்கை என்றாலே போராட்டம் தானே. அது கடலாக இருந்தால் என்ன? கால்வாயாக இருந்தால் என்ன? என்ற எண்ணத்தோடுதான் பரம்பரையாக இந்த பகுதியில் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இப்போது அவர்களையே அங்கிருந்து நகர்த்தப் போவதுதான் அவர்களை கலங்க வைத்துள்ளது.
நீர் வளத்துறையால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 270 வீடுகளில் அகற்றப்படுவதற்கு அடையாளமாக நீலவர்ணம் பூசப்பட்டுள்ளது. போராடும் கடலும் நீல நிறம்தான். அதை கண்டு கலங்காத மீனவர்கள் தங்கள் வீட்டில் பூசப்பட்டுள்ள நீல நிற கோடை பார்த்து கலங்குகிறார்கள்.
இங்கிருந்து அகற்றப்பட்டால் எங்கே அனுப்பப்படுவோம். தொலை தூரத்துக்கு சென்றால் அங்கிருந்து கடலுக்கு செல்ல எப்படி வருவது என்பதுதான் அவர்கள் கவலை. மீன் பிடிக்கும் தொழிலை தவிர வேறு தொழில்கள் எதையும் அவர்கள் தெரிந்து வைத்திருக்கவும் இல்லை.
குடிசைகளுக்குள் முடங்கி கிடந்தாலும் எங்களுக்கும் காலம் வரும்... என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால் இப்போது வெளியேற்றப்படுவோம் என்ற தகவல் அவர்களின் நம்பிக்கையை குலைத்து விட்டது.
தொலைதூர இடங்களில் வீடு ஒதுக்கி அங்கு அனுப்பப்பட்டால் புது வாழ்க்கையை மீண்டும் கட்டயெழுப்ப வேண்டிய கட்டாயம். ஆனால் அது தங்களால் முடியுமா? என்ற எண்ணம்தான் அவர்களை தவிக்க விட்டுள்ளது.
தற்போது குடியிருக்கும் இடத்தில் இருந்து கடலுக்கு செல்லும் வகையில் அருகாமையில்தான் வீடுகள் வழங்கப்படும் என்று கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தை நம்பித்தான் வெளியேறுவதற்கு உடன்பட்டு கைரேகை வைத்து கொடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் இப்போது இடம் எங்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி அதிகாரிகள் வாய் திறக்கவில்லை என்கிறார்கள். அந்த மவுனம்தான் மீனவர்கள் மத்தியில் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறார்கள்.
கடலுக்கு அருகாமையில் எங்களுக்கு குடியிருப்புகள் தந்தால் காலி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. கடல்தான் எங்களுக்கு முக்கிய ஆதாரம். எங்களுக்கான வருமானம். அதை விட்டு வேறு எங்காவது மாற்றினால் எப்படி வாழ்வோம் என்கிறார் 70 வயது மாரியம்மா.
அவர் மேலும் கூறியதாவது:- 'எங்கள் அப்பா-அம்மா காலத்திலேயே இங்கு தான் வாழ்கிறோம். பணவசதி இல்லாவிட்டாலும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான தேவைகள் எல்லாம் கிடைக்கிறது. இடம் மாற்றி தந்தாலும் இந்த மாதிரி எல்லா வசதிகளும் வீட்டருகில் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு' என்றார்.
சுங்குவார் தெருவில் வசிக்கும் சில குடும்பத்தினர் தாங்கள் எங்கு குடியமர்த்தப்படுவோம் என்பது தெரியாமல் கைரேகை தர மாட்டோம் என்று மறுத்து விட்டார்கள்.
முதற்கட்டமாக லாக் நகர் முதல் ராதாகிருஷ்ணன் சாலை வரையிலான 2.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் கரையில் இருக்கும் மாட்டான் குப்பம் பகுதி வீடுகள் அகற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது குடியிருக்கும் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குடியமர்த்த ஆராய்ந்து வருவதாக கூறினார்கள். கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பிறகு மீள் குடியேற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்