search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. ஆட்சியில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தி.மு.க. ஆட்சியில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

    • அ.தி.மு.க.வுடைய கோட்டை. இன்றைக்கு தமிழ்நாட்டில் தி.மு.க அதிக இடங்களிலே வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கலாம்.
    • சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 10 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம்.

    காடையாம்பட்டி:

    அ.தி.மு.க. தற்காலிக பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலத்தில் இருந்து சென்னைக்கு ஓமலூர் வழியாக காரில் சென்றார். அவருக்கு தீவட்டிப்பட்டி பகுதியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    காடையாம்பட்டி ஒன்றியம் பண்ணப்பட்டியில் இருந்து தீவட்டிப்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கட்சி கொடிகள், பேனர்கள் வைக்கப்பட்டு, தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்ட மேடையில் நின்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    சேலம் மாவட்டம் அ.தி.மு.க.வுடைய கோட்டை. இன்றைக்கு தமிழ்நாட்டில் தி.மு.க அதிக இடங்களிலே வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 10 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். சேலம் மாவட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்குவது, கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வழங்குதல், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து அ.தி.மு.க. நற்பெயரை பெற்றுள்ளது.

    ஏழைகள் வசிக்கும் பகுதியிலே அம்மா கிளினிக் ஏற்படுத்தி அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த அரசாங்கம் அம்மா அரசாங்கம். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின், அ.தி.மு.க கொண்டு வந்த ஒரே திட்டம் என்பதால் அந்த கிளினிக் மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு இருப்பதை எண்ணி கிளினிக்கை மூடி உள்ளார்.

    நல்ல, நல்ல திட்டங்களை மூடு விழா நடத்துவதற்காகத்தான் இந்த அரசாங்கம் வந்ததே தவிர மக்களுக்கு நன்மை செய்ய வரவில்லை. மக்கள் நலன் சார்ந்து அ.தி.மு.க கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க. அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு 1 பவுன் தங்க தாலி, 50 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கியது. ஆனால் ஸ்டாலின் தலைமையில் இருக்கும் தி.மு.க. அரசுக்கு , ஏழை பெண்களுக்கு இந்த திட்டம் கிடைப்பதை கூட பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. ஒரு பவுன் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதாக கூறி அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். அதேபோல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். அதையும் நிறுத்திவிட்டனர்

    இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. முதலில் கருணாநிதி , அதன் பிறகு ஸ்டாலின், அதன் பிறகு உதயநிதி, அதன் பிறகு இன்பநிதி . இது என்ன அரச பரம்பரையா?. வேறு யாராவது முதல்-அமைச்சரானால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்ட கட்சி தான் தி.மு.க., அது கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதவியில் உள்ளனர்.

    இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் வீட்டுக்கு போவது உறுதி. அனைத்து துறைகளிலும் கடந்த 14 மாத காலங்களில் தி.மு.க. ரூ. 20 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. எனவே இந்த ஆட்சியை அகற்றி விட்டு அம்மாவுடைய ஆட்சி மலர அனைவரும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×