search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கண்டெய்னர் லாரிகள் 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
    X

    கண்டெய்னர் லாரிகள் 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

    • கடந்த 2014-ம் ஆண்டு டீசல் விலை 48 ரூபாயாக இருந்தது.
    • எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகையை கடந்த 2014-ம் ஆண்டு முதல் உயர்த்தி தரவில்லை.

    ராயபுரம்:

    சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் வெளிநாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் சரக்கு பெட்டகம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்வது வழக்கம். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் ஈடு பட்டுள்ளன.

    கடந்த 2014-ம் ஆண்டு முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகை உயர்த்தி தரப்பட வில்லை. வாடகையை உயர்த்தி தராததால் வருகிற 4-ந்தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் இயங்கும் ஒப்பந்ததாரர்கள் முடி வெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து டிரெய்லர் ஆர்கனைசேஷன் அசோசியேஷன் செயலாளர் எம்.எம்.கோபி. கூறியதாவது:-

    சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் சரக்கு பெட்டகம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கண்டெய்னர் லாரிகள் மூலம் எடுத்து செல்வது வழக்கம்.

    எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகையை கடந்த 2014-ம் ஆண்டு முதல் உயர்த்தி தரவில்லை. இது குறித்து பல்வேறு முறை சி.எப்.எஸ், சி.எச்.ஏ. ஸ்டீமர் ஏஜென்ட் ஆகிய அமைப்புகளிடம் கேட்டோம். எங்களுக்கு உடனடியாக வாடகை உயர்த்தி தர வேண்டும்.

    கடந்த 2014-ம் ஆண்டு டீசல் விலை 48 ரூபாயாக இருந்தது. தற்போது 110 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் இன்சூரன்ஸ், எப்.சி. மற்றும் உதிரி பாகங்களில் விலை ஏற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகையால் உடனடியாக எங்களுக்கு வாடகை உயர்த்தி தர வேண்டும்.

    அப்படி இல்லை என்றால் எங்களது அனைத்து சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் உள்ள ஒப்பந்ததாரர்களின் கூட்டமைப்பு சார்பில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் படி வருகிற 4-ந்தேதி முதல் கண்டெய்னர் லாரிகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×