search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பஸ் பயணத்தின் போது படிக்கட்டில் தொங்கியபடி ரகளை செய்யும் மாணவர்களை பிடிக்க அதிரடி நடவடிக்கை
    X

    பஸ் பயணத்தின் போது படிக்கட்டில் தொங்கியபடி ரகளை செய்யும் மாணவர்களை பிடிக்க அதிரடி நடவடிக்கை

    • வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • பஸ் படிக்கட்டில் தொங்கிய படி வந்த பள்ளி மாணவர்களை கீழே இறக்கி அவர்களுக்கு அறிவுரை கூறியதுடன் இது போன்று தொடர்ந்து செயல்பட்டால் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

    சென்னை:

    சென்னையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

    பஸ்சின் உள்ளே இடம் இருந்தாலும் சில மாணவர்கள் பஸ்சுக்குள் சென்று பயணிக்க விரும்புவதில்லை. படிக்கட்டில் தொங்கிய படியே பயணம் செய்வார்கள்.

    இது போன்ற நேரங்களில் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பக்கவாட்டு கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டும் பயணம் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் பஸ்சின் கூரை மீது ஏறியும் ஆபத்தை உணராமல் பயணம் செய்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் அவ்வப்போது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் மாணவர்களின் படிக்கட்டு பயணம் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் பள்ளி மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு கடிவாளம் போட போலீசார் முடிவு செய்தனர்.

    இது தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் ஆகியோரது உத்தரவின் பேரில் சென்னை மாநகர் முழுவதும் போலீசார் இன்று படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை பிடிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பஸ் படிக்கட்டில் தொங்கிய படி வந்த பள்ளி மாணவர்களை கீழே இறக்கி அவர்களுக்கு அறிவுரை கூறியதுடன் இது போன்று தொடர்ந்து செயல்பட்டால் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

    இது போன்று சென்னையில் அனைத்து முக்கிய போக்குவரத்து சந்திப்புகளிலும் போக்குவரத்து போலீசார் இன்று காலையில் தீவிரமாக கண்காணித்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை மடக்கி பிடித்தனர்.

    படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று போக்குவரத்து போலீசார் பள்ளி கூடங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது படியில் தொங்கி பயணம் செய்யும் போது தவறி கீழே விழுந்தால் மரணம் நிச்சயம் என்றும், இதனால் உங்களது பெற்றோருக்கும் எவ்வளவு பெரிய இழப்பு ஏற்படும் தெரியுமா? என்றும் மாணவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.

    இந்த நிலையில் தான் இன்று படிக்கட்டில் தொங்கிய படி சென்ற பள்ளி மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இப்படி பிடிபட்ட மாணவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்த போலீசார் அவைகளை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்து உள்ளனர்.

    போக்குவரத்து போலீசாரின் இந்த படிக்கட்டு விழிப்புணர்வு நடவடிக்கை தொடந்து நடைபெறும் என்றும், எனவே மாணவர்கள் பஸ்சில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×