search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்
    X

    கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்

    • இளநிலை படிக்கும் மாணவியர்களிடம் இருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், அவர்கள் படித்த அரசு பள்ளி விவரங்களை தொகுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
    • ஒவ்வொரு மாணவிகளும் ஆதார் ஜெராக்ஸ், வங்கி கணக்கு புத்தகம், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் கொண்டு வர அறிவுறுத்த வேண்டும்.

    சென்னை:

    அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு முகாம் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தொழில்நுட்ப கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி, இளநிலை பயிலும் மாணவிகளுக்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக https://penkalvi.tn.gov.in/ என்ற முகவரியில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த இணைய தளத்தில் பயன்பெறும் மாணவிகளின் விவரங்களை இன்று முதல் 30-ந்தேதிக்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து உடனடியாக அந்த இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடரும் மாணவிகள் இத்திட்டத்தில் பயன் பெறுவார்கள்.

    இதற்காக இளநிலை படிக்கும் மாணவியர்களிடம் இருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், அவர்கள் படித்த அரசு பள்ளி விவரங்களை தொகுத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    இதற்காக ஒவ்வொரு மாணவிகளும் ஆதார் ஜெராக்ஸ், வங்கி கணக்கு புத்தகம், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் கொண்டு வர அறிவுறுத்த வேண்டும்.

    இவற்றை ஒவ்வொரு கல்லூரி துறை சார்ந்த தலைவர்கள் இணைய தளத்தில் உள்ளீடு செய்து அனுப்ப வேண்டும்.

    ஓ.டி.பி. அனுப்பப்படும் என்பதால் மாணவிகள் செல்போனை தவறாது கொண்டு வர வேண்டும். மாணவிகளும் தாங்களாகவே இதை பதிவேற்றம் செய்யலாம்.

    அனைத்து விவரங்களும் வருகிற 30-ந்தேதிக்குள் பதிவிட வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குள் கல்லூரி வாரியாக பதிவிடப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதனை கல்லூரி கல்வி இயக்கக இயக்குனர், தொழில் நுட்ப கல்வி இயக்கக ஆணையர், நிகர் நிலை பல்கலைக்கழகங்களின் அனைத்து பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

    Next Story
    ×