search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் மின்வெட்டு வராது- மின்வாரிய உயர் அதிகாரி பேட்டி
    X

    தமிழகத்தில் மின்வெட்டு வராது- மின்வாரிய உயர் அதிகாரி பேட்டி

    • மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம், மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
    • தமிழக அரசை பொறுத்தவரை, ரூ.926.16 கோடி பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    தமிழகம் உள்பட பல மாநிலங்கள், அந்தந்த மாநிலத்தின் மின்சார தேவைக்கு ஏற்ப வெளிச்சந்தையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது ஒரு நாளைக்கு 15 ஆயிரத்து 954 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

    இதில், அரசின் அனல் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தையும்விட, கூடுதலாக 2 ஆயிரத்து 115 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையில் இருந்து வாங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்துக்கு அவ்வப்போது, அதற்கான பணம் வழங்கப்பட்டு வருகிறது.

    மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் மின் முறைகள் இயக்கக கழகம் (போசோகோ) செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம், மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

    அவ்வாறு, மின்சாரம் வாங்கப்படும்போது, அதற்கான கட்டணம், தாமதமாக செலுத்தும் பட்சத்தில், ஒவ்வொரு மாதமும் 0.5 சதவீதம் கூடுதல் வட்டி வசூலிக்கப்படும் என்றும், கட்டணம் செலுத்துவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால், முதலில் குறுகிய கால தேவைக்கு பெறப்படும் மின்சாரம் வழங்கப்படாது என்றும், அதையும் மீறினால் நீண்டகால தேவைக்கான மின்சாரம் வழங்குவது தடை விதிக்கப்படும் என்றும் கடந்த ஜூன் மாதம் முதல் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன.

    இந்த நிலையில், தமிழகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், மணிப்பூர், மிசோரம், ஜார்கண்ட், பீகார், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் ஆகிய 13 மாநிலங்களை சேர்ந்த மின் வினியோக நிறுவனங்கள் சேர்ந்து, மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.5,085 கோடி தொகையை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது.

    தமிழக அரசை பொறுத்தவரை, ரூ.926.16 கோடி பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. அதிகபட்சமாக, தெலுங்கானா ரூ.1,380 கோடி கடன் வைத்துள்ளது. குறைவாக, மிசோரம் ரூ.17 கோடி பாக்கி வைத்துள்ளது. இந்த நிலையில், கடன் பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள், பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யவும், வழங்கவும், மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பவர் சிஸ்டம் ஆபரேசன் கார்ப்பரேசன் எனப்படும் நிறுவனம் தடை விதித்துள்ளது.

    இதுகுறித்து, அகில இந்திய மின் என்ஜினீயர்கள் கூட்டமைப்பின் தலைவர் சைலேந்திர துபே கூறும்போது, "மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்னும் ஒப்புதல் பெறவில்லை. நிலைக்குழுவிடம் உள்ளது. ஆனாலும், அந்த மசோதாவில் உள்ள பரிந்துரைகளை மின் முறைகள் இயக்கக கழகம் அமல்படுத்தியுள்ளது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழக அரசும் ரூ.926.16 கோடி பாக்கி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தமிழக மின்வாரிய உயர் அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தமிழக மின் வாரியம் வெளிச்சந்தையில் வாங்கிய மின்சாரத்துக்காக செலுத்த வேண்டிய ரூ.926.16 கோடியில், ரூ.850 கோடியை செலுத்திவிட்டது. ஆனால், இது கணக்கில் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ளது. மீதமுள்ள தொகையை ஓரிரு நாட்களில் செலுத்தி விடுவோம். தமிழகத்தை பொறுத்தமட்டில், மின் உற்பத்தி உபரியாக இருப்பதால், வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

    காற்றாலை, அனல் மின் நிலையம் உள்பட அனைத்து மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து முழு அளவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் மின் வெட்டு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×