search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து-மாத்திரைகள் இல்லம் தேடி வருகிறதா?- நோயாளிகள் கருத்து
    X

    ராஜேஸ்வரி - தங்கபுஷ்பம் - பாலமுருகன்

    'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் மருந்து-மாத்திரைகள் இல்லம் தேடி வருகிறதா?- நோயாளிகள் கருத்து

    • மக்களை தேடி மருத்துவம் திட்டம் மலை கிராமங்கள், குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமின்றி சென்னை போன்ற பெருநகரங்களிலும் வசிக்கும் மக்களுக்கும் பயன் உள்ளதாக இருந்து வருகிறது.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சேர்ந்த பின்னர் மருந்து-மாத்திரைகள் வீடு தேடி வந்து விடுவதாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திலகவதி கூறினார்.

    சென்னை:

    நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய பிரச்சினை போன்ற நோய்களால் அவதிப்படும் நோயாளிகளின் இல்லத்துக்கு மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று மருந்து-மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி தொடங்கிவைத்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சாமனப்பள்ளி கிராமத்தில் உள்ள நோயாளியின் வீட்டுக்கு நேரில் சென்று மருந்து-மாத்திரைகள் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது 30 லட்சம் நோயாளிகள் பெயர்கள் இணைக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த திட்டத்தில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இணைந்துள்ளனர்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த திட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை ஒவ்வொரு இலக்கை தாண்டும் போதும் அந்த நோயாளி வீட்டுக்கே நேரில் சென்று மருந்து-மாத்திரைகளை வழங்கி நலம் விசாரித்து, இந்த திட்டத்தை மெருக்கேற்றி வருகிறார்.

    தற்போது இந்த திட்டம் மலை கிராமங்கள், குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமின்றி சென்னை போன்ற பெருநகரங்களிலும் வசிக்கும் மக்களுக்கும் பயன் உள்ளதாக இருந்து வருகிறது. சென்னையில் இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மக்களை தேடி மாதந்தோறும் மருந்து-மாத்திரைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ள நோயாளிகள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

    சென்னை செங்குன்றம் காவங்கரை அழகிரி தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 60):-

    நான் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்காக கடந்த 7 ஆண்டுகளாக மாத்திரை எடுத்து வருகிறேன். மருந்து-மாத்திரைக்கே மாதம் பெரும் தொகை செலவாகி வந்தது. இந்த நிலையில் முதல்-அமைச்சரின் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் நான் இணைந்தேன். அதன் பின்னர் வீடு தேடி மாத்திரைகள் வந்தன.

    தற்போது என்னை நீரிழிவு நோய் பரிசோதனை செய்துவிட்டு வருமாறு கூறுகின்றனர். எனக்கு சிறிது தூரம் நடந்தாலும் மூச்சு அதிகம் வாங்குகிறது. இதனால் நான் நீரிழிவு நோய் பரிசோதனை செய்ய முடியாமல் வீட்டிலேயே உள்ளேன். எனவே வீடு தேடி மருந்து-மாத்திரை வழங்குவது போன்று மருத்துவ குழுவினரையும் அனுப்பி இந்த பரிசோதனைகளை மேற்கொண்டால் என்னை போன்ற நோயாளிகள் பெரிதும் பயன் அடைவார்கள். மேலும் எனக்கு கால்வலி மாத்திரையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திலகவதி (52) என்ற பெண் கூறியதாவது:-

    நான் நீரிழிவு நோய்க்கு 3 ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சேர்ந்த பின்னர் மருந்து-மாத்திரைகள் வீடு தேடி வந்து விடுகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் அலைச்சல் இல்லாமல் உள்ளது.

    ஆஸ்பத்திரிக்கு சென்று வீடு திரும்புவதற்குள் உடலும், மனதும் சோர்வு அடைந்துவிடும். தற்போது அந்த நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது நிம்மதி அளிக்கிறது. மருந்து-மாத்திரைகளை கொண்டு வரும் பணியாளர்களும் கனிவுடனும், அக்கறையுடனும் நடந்துகொள்கிறார்கள். இந்த திட்டம் இன்னும் பல நோயாளிகளை சென்றடைய வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலமுருகன் (54):-

    நான் 5 ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டேன். அதன் பின்னர் மாதம் தவறாமல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று மருந்து-மாத்திரை வாங்கி சாப்பிட்டு வருகிறேன்.

    சில மாதங்களுக்கு முன்பு வீடு, வீடாக உடல் பரிசோதனை செய்ய வந்த பணியாளர்கள் எனது பெயரை குறிப்பெடுத்து சென்றனர். எனினும் நான் தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேரில் சென்றுதான் மாத்திரைகளை வாங்கி வருகிறேன். யாரும் வீடு தேடி வந்து மருந்து-மாத்திரைகள் தருவது இல்லை. நீங்கள் சொல்லிதான் இந்த திட்டத்தில் என் பெயர் இருக்கிறது என்பதே தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் வ.உ.சி. நகரை சேர்ந்த சமையல் தொழிலாளி வெங்கடேஸ்வர் (64):-

    நான் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன். கொலஸ்ட்ரால் பிரச்சினையும் இருக்கிறது. சுகாதார நிலையத்தில் மருந்து-மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தேன். இதற்காக ஒவ்வொரு மாதமும் சுகாதார நிலையத்துக்கு செல்வேன். நோயாளிகள் கூட்டம் அதிகம் இருக்கும் சமயத்தில் அரை நாள் வீணாகிவிடும். இதனால் அன்றைய தினம் தொழிலுக்கு செல்ல முடியாமல் வருவாய் இழப்பு ஏற்படும். தற்போது 'மக்களை தேடி மருத்துவ திட்டம்' என்னை போன்ற தினக்கூலி தொழிலாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    மாதத்தின் முதல் வாரத்தில் அனைத்து மாத்திரைகளும் முறையாக வீட்டுக்கு வந்து விடுகின்றன. இதனால் சுகாதார நிலையத்துக்கு செல்லும் நேரம் மிச்சமாவதால் நான் தொழிலுக்கு நிம்மதியாக சென்று வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை செங்குன்றம் காவங்கரை அழகிரி தெருவை சேர்ந்த தங்கபுஷ்பம் (70):-

    எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ஆகும். நான் இங்கு எனது மகள் வீட்டில் வசித்து வருகிறேன். நீரிழிவு நோயால் நான் மிகவும் சிரமப்படுகிறேன்.

    இந்த தள்ளாத வயதில் மருந்து-மாத்திரைகள் வாங்குவதற்கு மிகவும் சிரமம் அடைகிறேன். எனவே 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் என்னையும் சேர்க்க வேண்டும். வீடு தேடி மருந்து-மாத்திரை வழங்கினால் மகிழ்ச்சி அடைவேன். உடல்நலமும் தேறிவிடும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே கோரிக்கையை அதே பகுதியை சேர்ந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கீதா என்ற 54 வயது பெண்மணியும் வைத்துள்ளார்.

    இந்தியாவிலேயே முன்னோடி திட்டங்களில் ஒன்றாக மக்களை தேடி மருத்துவ திட்டம் பார்க்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தின் பயன் நோயாளிகளுக்கு முறையாக சென்றடைகிறதா? என்பதை அவ்வப்போது அதிகாரிகள் நோயாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பயனாளிகளின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

    Next Story
    ×