search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் பூங்காவை தவிர எதுவும் அமைக்கக்கூடாது- அன்புமணி
    X

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் பூங்காவை தவிர எதுவும் அமைக்கக்கூடாது- அன்புமணி

    • மாறாக வணிக வளாகம், அடுக்குமாடிக் குடியிருப்பு, ஐ.டி பார்க் போன்ற எதையும் அமைக்கக் கூடாது.
    • இந்தியாவிலும் உலகெங்கிலும் முன்னணி நகரங்கள் மிகப்பெரிய பொதுப் பூங்காக்களைக் கொண்டுள்ளன.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 40 துறைகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    சென்னை கோயம்பேட்டில் இயங்கிவந்த புறநகர்ப் பேருந்து நிலையம் வண்டலூர் - கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெரிய பசுமைப் பூங்காவைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். மாறாக வணிக வளாகம், திரையரங்குகள், அடுக்குமாடிக் குடியிருப்பு, ஐ.டி பார்க் போன்ற எதையும் அமைக்கக் கூடாது.

    சென்னை மக்களை அச்சுறுத்தும் தொற்றா நோய்ப் பேராபத்து வெள்ளச் சேதம், நகர்ப்புற வெப்பத்தீவு, நீர்ப்பற்றாக் குறை உள்ளிட்ட பல சிக்கல்களுக்குத் தீர்வாக கோயம்பேடு பசுமைப் பூங்கா அமையும். கோயம்பேடு, அரும்பாக்கம், திருமங்கலம், முகப்பேர், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், மெட்ரோ ரெயில் மற்றும் மாநகரப் பேருந்து வசதிகளுடன் கோயம்பேடு இணைக்கப்பட்டுள்ளதால் அதிக தொலைவில் உள்ள மக்களுக்கும் பயனாக இருக்கும்.

    இந்தியாவிலும் உலகெங்கிலும் முன்னணி நகரங்கள் மிகப்பெரிய பொதுப் பூங்காக்களைக் கொண்டுள்ளன. அதுபோன்ற நல்வாய்ப்பு சென்னையில் இல்லை.

    சென்னை பூங்காக்களில் 20 ஏக்கர் பரப்பிலான செம்மொழிப் பூங்கா மற்றும் 15 ஏக்கர் பரப்பிலான அண்ணாநகர் கோபுரம் பூங்கா ஆகியன மட்டுமே பொது மக்கள் முழு அளவில் பயன்படுத்தத்தக்க பெரிய பூங்காக்கள் ஆகும்.

    முதலமைச்சர் வெளியிட்ட சென்னை மாநகராட்சியின், சென்னைக் காலநிலைச் செயல் திட்டத்தில் சென்னை மாநகரின் பசுமைப் பொது வெளியை அதிகரிப்போம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த உயர்ந்த லட்சியங்கள் வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், உண்மையாகவே நிறைவேற்றப்பட வேண்டும். சென்னைப் பெருநகரில் புதிய பூங்காக்கள் உருவாக்கு வதற்குப் போதுமான இடம் இல்லாத நிலையில், 36 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையமும், 6.8 ஏக்கர் பரப்பளவில் உள்ள புறநகரத் தனியார்ப் பேருந்து நிலையமும் இடம் மாற்றப்பட்டுள்ளது ஒரு நல்வாய்ப்பு ஆகும். இவற்றில் மொத்தமுள்ள 42.8 ஏக்கர் நிலத்தில், மாநகரப் பேருந்து நிலையத்திற்கான சுமார் 5 ஏக்கர் போக மீதமுள்ள பகுதியைப் புதிய பூங்காவாக உருவாக்க வேண்டும். இதன் மூலம், சுமார் 50 முதல் 60 ஏக்கர் அளவிலான பரப்பில் ஒரு பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும்.

    இதன்முலம், கடந்த 60 ஆண்டுகளில், சென்னையில் இருந்த ஏராளமான நீர்நிலைகளும் பசுமைப் பகுதிகளும் அழிக்கப்பட்டதுதான் வரலாறு என்பதை மாற்றி, ஒரு பெரிய பசுமைப் பூங்காவைப் புதிதாக அமைக்கும் சாதனையை தமிழ்நாடு அரசு படைக்க முடியும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×