search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: தமிழர் நாகரீக பெருமையை உலகிற்கு பறை சாற்றியது- அன்புமணி பாராட்டு
    X

    செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: தமிழர் நாகரீக பெருமையை உலகிற்கு பறை சாற்றியது- அன்புமணி பாராட்டு

    • 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு கோப்பையை வென்றிருக்கிறது.
    • உலகம் முழுவதும் அந்த நிகழ்ச்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்து தமிழர் நாகரிகத்தின் சிறப்புகளை உள்வாங்கிக் கொண்டது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு கோப்பையை வென்றிருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் கண்டுகளித்த சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், இனப் பெருமைகள், துயரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அனைவர் மனதிலும் பதிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பாராட்டத்தக்கது.

    சதுரங்கப் போட்டிகளின் தொடக்க விழாவைப் போல் இல்லாமல் உலகத் தமிழ் மாநாட்டுக்கு இணையாக தமிழர் நாகரிகத்தின் பெருமையையும், பண்பாட்டையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

    உலகம் முழுவதும் அந்த நிகழ்ச்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்து தமிழர் நாகரிகத்தின் சிறப்புகளை உள்வாங்கிக் கொண்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் கமலஹாசன் வழங்கிய வர்ணனை மிகவும் சிறப்பு. அதில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞரின் உழைப்பும் பாராட்டப்பட வேண்டியதாகும். இந்த நிகழ்ச்சி உட்பட ஒட்டு மொத்த நிகழ்ச்சியையும் இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனின் கருத்தாக்கமும், காட்சிகள் அமைப்பும் பாராட்டுக்குரியவை ஆகும். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரும் பாராட்டியதே இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.

    நிகழ்ச்சிகளைப் பார்த்த நான், தமிழன் என்ற முறையில் பெருமை அடைந்தேன். இந்த விழா மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை என்று தொடக்க விழாவில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்ய நாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் அபூர்வா உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், பங்களித்த கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×