என் மலர்

  தமிழ்நாடு

  பேரறிவாளன்
  X
  பேரறிவாளன்

  பேரறிவாளன் விடுதலை: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
  சென்னை:

  பேரறிவாளன் விடுதலையை அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

  தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு: பேரறிவாளன் விடுதலை வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சி அளிக்கிறது. பேரறிவாளனை போல் மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய முதல்-அமைச்சர் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பார்.

  திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி: பேரறிவாளனின் வெற்றி, நியாயத்தின், நேர்மையின் வெற்றி! எதிர்பார்க்கப்பட்ட இந்த நல்ல தீர்ப்பைக் கேட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல நியாயம், நீதி வெற்றி பெற்றது கண்டு நல்லுள்ளங்கள் பெருமகிழ்ச்சிக்கு அளவில்லை! மகிழ்கிறோம் வரவேற்கிறோம்!

  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. 31 ஆண்டுகளாக, இந்த ஏழு பேரும் துன்ப இருளில் வாடி வதங்கி விட்டார்கள். இழந்ததை இனி அவர்கள் மீண்டும் பெற முடியாது. இப்போது, உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டி இருக்கின்றது; மகிழ்ச்சி. பேரறிவாளனை போலவே, மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: பேரறிவாளன் விடுதலை குறித்த உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மனித உரிமை சார்ந்த கோணத்திலும் மிகவும் முக்கியமானதாகும். வழக்கில் தண்டிக்கப்பட்டு 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், இராபர்ட் பயஸ் ஆகிய 6 பேருக்கும் பொருந்தும். உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பை சுட்டிக்காட்டி அவர்களின் விடுதலைக்கான ஆணையை உச்சநீதிமன்றத்திலிருந்து தமிழக அரசே பெற முடியும்.

  அதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.

  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த தம்பி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

  இது தாய் அற்புதம்மாளின் நீண்ட கால சட்ட போராட்டத்துக்கும், பாசப் போராட்டத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். சுப்ரீம் கோர்ட்டில் விடுதலைக்கான வழக்கை பேரறிவாளனே போட்டிருந்தார்.

  இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் பிரபு, பாரி ஆகியோர் அடங்கிய குழுவினர் சிறப்பான வாதங்களை எடுத்து வைத்து இந்த வெற்றியை பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

  பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை: பேரறிவாளனை உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்புச் சட்டம் 142ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை பா.ஜனதா ஏற்றுக்கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகிறோம்.

  இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன்: ஆயுள் தண்டனை கைதி இத்தனை ஆண்டுகள் யாரும் சிறையில் இருந்தது கிடையாது.

  இந்தநிலையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கி இருப்பது வரவேற்கக்கூடியது. பாராட்டுக்குரியது. பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவரை விடுதலை செய்யக்கோரி சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்று இருக்கிறார். அவரையும் பாராட்டுகிறேன்.

  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்.

  அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்: பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அற்புதம்மாள் என்ற தாய் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நீண்டகாலம் நடத்திய சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.

  பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. பேரறிவாளனோடு சிறையில் வாடும் ஏனைய 6 பேரையும் விடுதலை செய்வதற்கான முயற்சியையும் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

  மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடிய பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது.

  நீண்டகாலமாகச் சிறையில் இருக்கக்கூடிய பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலைசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதை அனுப்பியபிறகு ஆளுநர் அதுகுறித்து முடிவெடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதன் பிறகுஇதற்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அதனை அனுப்பி வைத்தார். இன்று பேரறிவாளனை விடுதலை செய்து வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாட்டு ஆளுநரின்இந்த காலதாமதச் செயல் தவறானது என்று குட்டு வைக்கப்பட்டுள்ளது.

  அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டும்தான் ஆளுநரின் பணி என்பதைஇந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள ஆறு தமிழர்களும் விடுதலை ஆவதற்கான ஒருவழிவகை இத்தீர்ப்பின் விளைவாகப் பிறந்துள்ளது.

  இதுமட்டுமல்லாமல் 20 ஆண்டுக்காலம் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் இன்றைய தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இத்தீர்ப்பிலிருந்து படிப்பினை பெற்று தமிழ்நாட்டு ஆளுநர் தமிழ்நாட்டு அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்

  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்: 31 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எஸ்.டி.பி.ஐ. கட்சி மனதார வரவேற்கிறது.

  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவே இறுதியானது என்றும், ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதையும் இந்த தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.

  சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன்: பேரறிவாளன் அவர்களின் தாயார் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நீதிமன்றங்கள் சந்தித்து தற்போது 31 ஆண்டுகளாக நடந்த பாச போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சமத்துவ மக்கள் கழகம் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
  Next Story
  ×