search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விபத்து நடந்த கல்குவாரியின் கழுகுபார்வை காட்சி
    X
    விபத்து நடந்த கல்குவாரியின் கழுகுபார்வை காட்சி

    நெல்லை கல்குவாரி விபத்து- பாறைகளுக்குள் சிக்கிய மேலும் 2 பேரை மீட்கும் பணி தொய்வு

    மோப்ப நாய் ரெக்ஸ் உதவியுடன் இன்று 6வது நபரின் உடல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் கல்குவாரி ஒன்றில் கடந்த 14ந்தேதி ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

    அதில் விட்டிலா புரத்தை சேர்ந்த முருகன், நாட்டார்குளம் பகுதியை சேர்ந்த விஜய் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

    இளைய நயினார்குளத்தை சேர்ந்த செல்வம் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். தொடர்ந்து ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் சடலமாக மீட்கப்பட்டார்.

    இந்த நிலையில் பாறை சரிவில் சிக்கி இருந்த காக்கை குளத்தை சேர்ந்த செல்வக்குமார் (வயது30), ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (42) ஆகியோரை மீட்கும் பணி நேற்று 3வது நாளாக நடைபெற்றது.

    காயம் அடைந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடியபோது ஒருவரது உடல் இருக்கும் இடம் தெரியவந்தது. ஆனால் அவரை மீட்க முயன்றபோது பாறைகள் சரிந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

    தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு நள்ளிரவு வரையிலும் மீட்பு பணி நீடித்தது. இந்நிலையில் இன்று 4வது நாளாக மீட்பு பணி காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மோப்ப நாய் ரெக்ஸ் உதவியுடன் இன்று 6வது நபரின் உடல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சுரங்கத்துறை அதிகாரிகள் டிரோன் கேமரா மூலமாக கல்குவாரி முழுவதையும் படம் பிடித்து திருச்சி தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களது ஆலோசனையின் பேரில் இன்று அடுத்த கட்ட மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் தொடர்ந்து பாறைகள் சரிந்து வருவதால் மீட்பு பணியில் ஈடுபடுவது சிரமமாக இருப்பதாக பேரிடர் மீட்பு குழுவினரும் தெரிவித்து உள்ளனர். பாறைகளில் தொடர்ந்து கசியும் நீரினால் அவற்றின் உறுதி தன்மை குறைவாக இருப்பதாக மண்ணியல் துறையினரும் அறிக்கை அளித்துள்ளதால் அதிக எடை கொண்ட ராட்சத கிரேன்களை அங்கு நிலைநிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    எனினும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே இதுவரை மீட்கப்படாத 2 பேரின் உறவினர்களும் கல்குவாரி அருகிலேயே முகாமிட்டு இருக்கின்றனர். அவர்கள் எப்படியாவது 2 பேரையும் மீட்டு தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×