search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குழந்தை பிணம்
    X
    குழந்தை பிணம்

    கழிவுநீர் தொட்டியில் குழந்தை பிணம் - அரசு ஆஸ்பத்திரியில் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு

    நெல்லை அருகே கழிவுநீர் தொட்டியில் குழந்தை பிணம் கிடந்த சம்பவம் குறித்து அரசு ஆஸ்பத்திரியில் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினசரி அந்தப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்வார்கள்.

    நேற்று முன்தினம் அரசு ஆஸ்பத்திரியில் கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிந்ததால், ஊழியர்கள் அதை சுத்தம் செய்தனர். அப்போது அந்த தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன, ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த குழந்தை கழிவறையில் பிறந்ததும், அந்தக் குழந்தையை கழிவறை கோப்பையில் போட்டு, அப்படியே தண்ணீர் ஊற்றி செப்டிக் டேங்கிற்கு அனுப்பி, கொலை செய்ததும் தெரிய வந்தது. அந்த குழந்தை எட்டு மாதத்தில் குறைப் பிரசவத்தில் பிறந்துள்ளது.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சேரன்மகா தேவி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த இளம்பெண்களில் யாரோ ஒருவர் தவறான முறையில் குழந்தை உண்டானதால், ஆஸ்பத்திரிக்கு வந்து கழிவறையில் குழந்தை பெற்று, அந்த குழந்தையை கழிவறை கோப்பையில் போட்டு, தண்ணீரை ஊற்றி கழிவு நீர் தொட்டிக்கு அனுப்பியது தெரியவந்தது.

    அந்த பெண் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். ஆஸ்பத்திரியில் சி.சி.டி.வி. காமிரா உள்ளது. இதனால் சி.சி.டி.வி. காமிராவில் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் பெண்கள் பற்றி போலீசார் தீவிரமாக பார்வையிட்டனர்.

    அப்போது பிரசவ வார்டுக்கு சந்தேகப்படும்படி சில பெண்கள் வந்து சென்றது அதில் பதிவாகி உள்ளது. இதை வைத்து அந்த பகுதியில் உள்ள கிராமத்தில் சம்பந்தப்பட்ட பெண் அந்த பகுதியை சேர்ந்தவரா என்று இன்ஸ்பெக்டர் சுகா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×