search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் அழைத்து சென்ற கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்தித்து பேசிய காட்சி
    X
    போலீசார் அழைத்து சென்ற கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்தித்து பேசிய காட்சி

    பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் உறவினர்களை காண அனுமதித்த விவகாரம்: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் சஸ்பெண்டு

    பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் உறவினர்களை காண அனுமதித்த விவகாரம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சேலம் கமி‌ஷனர் உத்தரவிட்டார்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹேரென்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்காக திருநாவுக்கரசு உள்பட 5 பேரையும் சேலம் போலீசார் நேற்று தனி வாகனத்தில் கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் வழக்கு விசாரணை முடிந்ததும் மீண்டும் அவர்கள் 5 பேரையும் போலீசார் வாகனத்தில் சேலத்திற்கு அழைத்து சென்றனர்.

    அப்போது கோவை விமான நிலையம் அருகே சென்ற போது இவர்களது வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது. வாகனம் நின்றதும் அங்கு ஏற்கனவே காத்திருந்த குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரின் உறவினர்களும் அவர்களை சந்தித்தனர். சுமார் 5 நிமிடங்களுக்கும் மேலாக குற்றவாளிகள் தங்கள் உறவினர்களுடன் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த வாகனம் அங்கிருந்து சேலம் புறப்பட்டு சென்றது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நேற்று மாலை முழுவதும் வேகமாக பரவியது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்கு அனுமதி கிடையாது. ஆனால் விதிகளை மீறி இவர்கள் 5 பேரையும் உறவினர்கள் சந்திக்க அனுமதி கொடுத்தது எப்படி? என்பது குறித்து விசாரிக்க சேலம் மாநகர கமி‌ஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். விசாரணையில் அது உண்மை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் உறவினர்களை பேச அனுமதி வழங்கியதற்காக வேனில் பாதுகாப்பு பணிக்கு சென்ற சேலம் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ரமேஷ்குமார், கார்த்தி உள்ளிட்ட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சேலம் கமி‌ஷனர் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் மீது துறைரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.
    Next Story
    ×