search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    தர்மபுரி அன்னசாகரத்தில் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 20 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை

    தர்மபுரி அன்னசாகரத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 20 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி அன்னசாகரத்தில் சிவசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு அர்ச்சகர் தண்டபாணி பூஜைகளை முடித்து கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று அதிகாலை 6 மணிக்கு அர்ச்சகர் கோவிலின் பிரதான கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது கோவிலின் உள்புறம் உள்ள கதவுகளின் பூட்டுகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ஊர் பொதுமக்களுக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் கோவிலில் கொள்ளை போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சம்பவத்தன்று இரவு கோவிலின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் மீது ஏறிய மர்ம நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்க்குகளை தண்ணீர் நிறைந்த பக்கெட்டில் போட்டுள்ளனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் கோவில் உள் பிரகாரத்தில் உள்ள 6 பூட்டுகளை உடைத்து பீரோவில் இருந்த சாமிக்கு சாத்தப்படும் வெள்ளிக் கவசங்கள், வெள்ளி வேல்கள் உள்ளிட்ட 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் அர்ச்சகரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.

    இந்த கொள்ளை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், கோவில் செயல் அலுவலர் விமலா மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து கோவில் நகைகளை சரிபார்த்தனர். பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோவில் ஒன்றில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×