search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யூ டியூப் கேம் மதன்
    X
    யூ டியூப் கேம் மதன்

    தர்மபுரியில் சிக்கிய ‘பப்ஜி’ மதன் 3 ஆண்டுகளில் ரூ.75 கோடிக்கு அதிபதி

    கோடிக்கணக்கில் பணம் வந்ததால் மதனுக்கு சென்னையில் 3 பங்களாக்களும், சேலத்தில் 2 பங்களாக்களும் உள்ளன. மேலும் ஆடி கார்களும் வைத்திருந்தார்.
    தர்மபுரி:

    யூடியூப் சேனல் நடத்தி பிரபலமானவர் ‘பப்ஜி’ மதன் (வயது 30). சிவில் என்ஜினியரான இவர் மத்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்த பப்ஜி ஆன்லைன் விளையாட்டை தனது யூடியூப் சேனலில் தொடர்ந்து நடத்தி வந்தார்.

    மேலும் தனது யூடியூப் சேனல் மூலம் பெண்களை பற்றி மிகவும் அருவெறுக்கத்தக்க வகையில் தொடர்ந்து பேசி வந்தார். இதன் மூலம் அவருக்கு 7 லட்சம் பேர் வரை உறுப்பினர்கள் ஆனார்கள். இதனால் அவருக்கு கோடிக்கணக்கில் பணம் குவிந்தது.

    இந்த நிலையில் பப்ஜி மதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை வடபழனியை சேர்ந்த அபிஷேக் என்பவர் போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். மதன் மீது பெண்களிடம் ஆபாசமாக பேசுதல், தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல் நடத்தியது என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னை தேடுவதை அறிந்து கொண்ட மதன், கடந்த 15-ந் தேதி முதல் தலைமறைவானார்.

    இதனால் மதனை பிடிக்க அவரது சொந்த ஊரான சேலம் தாதகாப்பட்டி தனிப்படை போலீசார் விரைந்தனர். அங்கு மதன் இல்லாததால் அவரது மனைவி கிருத்திகாவை (26) அவரது 9 மாத கைக்குழந்தையுடன் கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில். மதனுக்கு யூடியூப் சேனல் நடத்தியதில் உறுதுணையாக இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கிருத்திகாவை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே போலீசாரிடம் சிக்காமல் மதன், அவ்வப்போது தனது இருப்பிடத்தை மாற்றி வந்தார்.

    மேலும் தன்னை பிடிக்க முடியாது என்று போலீசாருக்கு சவால் விட்டு வீடியோவும் வெளியிட்டார். அதில் தான் கைது செய்யப்பட்டாலும், விரைவில் வெளியே வந்து வேறொரு பெயரில் லட்சம் லட்சமாக சம்பாதிப்பேன் என்று பேசியுள்ளார்.

    இந்த நிலையில் தர்மபுரியில் மதன் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் நேற்று தர்மபுரிக்கு வந்து ரகசியமாக கண்காணித்தனர். அப்போது குண்டல்பட்டியில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் அறை எண் 102-ல் தங்கியிருந்த மதனை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி கைது செய்தனர்.

    அப்போது நடத்திய விசாரணையில் மதன், பெரம்பலூரை சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் தங்கியுள்ளார். மேலும் கடந்த 17-ந் தேதி முதல் இருவரும் அந்த விடுதியில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. அங்கு அவரிடம் இருந்து லேப் டாப், கார், டிரோன் கேமரா மற்றும் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது போலீசாரிடம் மதன் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். தன்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் தவறுவிட்டேன். நான் செய்தது அனைத்தும் தப்பு தான் என்று அழுதுள்ளார்.

    ஆனால் போலீசார், அதை பொருட்படுத்தாமல் மதனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி சென்னைக்கு அழைத்து சென்றனர். மேலும் தனியார் விடுதியின் பொறுப்பை கவனித்து வந்த 2 வாலிபர்களையும் தனிப்படை போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

    சென்னையில் நேற்று இரவு முதல் மதனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    தற்போது போலீசாரிடம் சிக்கிய மதன் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளது.

    என்ஜினியரீங் பட்டதாரியான ‘பப்ஜி’ மதன் கடந்த 2018 -ம் ஆண்டில் சென்னை அம்பத்தூரில் ‘ஹீரோ’ என்ற பெயரில் ஓட்டல் நடத்தியுள்ளார். இதில் வியாபாரம் சரியாக நடக்காததால் அவருக்கு ரூ.5 லட்சம் கடன் ஏற்பட்டது. மேலும் வாடகை கொடுக்க முடியாமலும் சிரமப்பட்டு வந்தார். இதனால் ஓட்டலை காலி செய்து விட்டார்.

    அதன்பிறகே அவர் தனது மனைவி கிருத்திகாவுடன் சேர்ந்து யூடியூப் சேனலை ஆரம்பித்தார். சுமார் 10-க்கும் மேற்பட்ட பெயர்களில் சேனல் தொடங்கினார். இதனால் அவர் 3 ஆண்டுகளில் 75 கோடிக்கு சம்பாதித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

    கோடிக்கணக்கில் பணம் வந்ததால் மதனுக்கு சென்னையில் 3 பங்களாக்களும், சேலத்தில் 2 பங்களாக்களும் உள்ளன. மேலும் ஆடி கார்களும் வைத்திருந்தார். மேலும் அவரது மனைவி வங்கி கணக்கில் ரூ.4 கோடி இருப்பும் இருந்தது.

    தொடர்ந்து மதனிடம் விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் மற்றும் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×