search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான பெண் ஊழியர் ரதிதேவி
    X
    கைதான பெண் ஊழியர் ரதிதேவி

    கொரோனா சிகிச்சை பெற்ற பெண் நோயாளி கழுத்தை நெரித்து கொலை- ஆஸ்பத்திரி பெண் ஊழியர் கைது

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆஸ்பத்திரி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னை மேற்கு தாம்பரம் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் மவுலி. தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சுமிதா (வயது 41). சுமிதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த மாதம் 22-ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அங்கு கொரோனா சிகிச்சை அளிக்கும் கட்டிடமான டவர் 3-ல், 5-வது தளத்தில் சுமிதாவை அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், ஓரிரு நாட்கள் கழித்து சிகிச்சை பெற்று வந்த தனது மனைவியை பார்க்க மவுலி ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.

    அப்போது அவர் சிகிச்சை பெற்று வந்த தளத்தில் சுமிதா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசிடம் புகாரும் அளித்திருந்தார். இந்த சூழ்நிலையில், ஆஸ்பத்திரி 8-வது மாடியில் கடந்த 8-ந் தேதி அழுகிய நிலையில், சுமிதாவின் உடலை போலீசார் மீட்டனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின் சுமிதா உடல் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில், சுமிதா காணாமல் போன அன்று, அவரை ஆஸ்பத்திரி பெண் ஊழியர் சக்கர நாற்காலியில் தள்ளி கொண்டு செல்வது ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சியை வைத்து, அந்த பெண் ஊழியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதலில், தனக்கும், இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என கூறி வந்த அந்த பெண், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கினார். இது குறித்து போலீசாரிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    என் பெயர் ரதிதேவி (வயது 40). நான் திருவொற்றியூரை சேர்ந்தவள். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறேன். ஆஸ்பத்திரி நர்சுகளுக்கு உதவியாக இருந்து, அவர்கள் கூறும் வேலைகளை செய்வேன். ஒரு நாள் சுமிதா என்ற நோயாளி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    ஒரு நாள், அவர் வைத்திருந்த பையில் பணம் இருந்தது தெரியவந்தது. எனக்கு பணத்தின் மேல் ஆசைவந்தது. அந்த பணத்தை எடுக்க முயன்றேன். அப்போது அவர் என் கையை பிடித்துவிட்டார். மேலும், என்னை ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் செய்ய போவதாக கூறினார். இதனால் என் வேலை பறி போய்விடுமோ என எனக்கு பயம் வந்தது. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதையடுத்து அன்றைய தினம் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி அவரை சக்கர நாற்காலியில் அழைத்து சென்றேன்.

    நான் அவரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து 8-வது தளத்துக்கு லிப்டில் அழைத்து சென்றேன். அங்கு ஒரு அறையில் வைத்து, கீழே கிடந்த வயரால் இறுக்கி, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என அவரது ஆடைகளை களைத்து நிர்வாணப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தது போல் தோற்றத்தை உருவாக்கி, அவர் வைத்திருந்த ரூ.9,500 பணத்தையும், செல்போனையும் திருடி சென்று விட்டேன்.

    போலீசார் இந்த வழக்கை பாலியல் பலாத்காரம் என்ற கோணத்தில் விசாரித்ததால், நான் மாட்டிக்கொள்ள மாட்டேன் என நிம்மதியில் இருந்தேன். ஆனாலும் போலீசார் என்னை பிடித்துவிட்டனர்’ என போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆஸ்பத்திரியான ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில், கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆனால் இத்தகைய பாதுகாப்பு குறைபாடால், பெண் நோயாளி ஒருவர், ஆஸ்பத்திரி ஊழியராலே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×