search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    பாலியல் குற்றம் சாட்டப்பட்ட டி.ஜி.பி.யை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்- கே.எஸ்.அழகிரி

    பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் ரீதியாக, தொல்லை கொடுத்ததாக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான சிறப்பு டி.ஜி.பி. மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து, மந்த நிலையில் விசாரணை நடத்திக் கொண்டிருப்பது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

    இந்த வழக்கில் புகார் அளிக்க வந்த சம்மந்தப்பட்ட பெண் எஸ்.பி.யை தடுத்ததாக செங்கல்பட்டு எஸ்.பி. இடைநீக்கம் செய்யப்பட்டதை அனைவரும் அறிவார்கள். ஏற்கனவே இந்த வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறப்பு டி.ஜி.பி.யை உடனடியாக இடை நீக்கம் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு வலியுறுத்தியது.

    ஆனால், இதுவரை இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட அந்த மூத்த அதிகாரி மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது அவருக்கு எதிரான நடவடிக்கையாக கருத முடியாது. இந்த நடவடிக்கையின் மூலம் அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்று அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது பணியில் இருப்பதற்கு சமமாகவே கருதப்படும்.

    இதன்மூலம், அவர் பணியில் இருப்பதாக கருதப்பட்டு அவருக்கு சேர வேண்டிய படிகள், சலுகைகள் அனைத்தும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏறத்தாழ, அவர் பணியில் இருப்பதாக கருதப்பட்டு, விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் காவல்துறையினர் ஆதரவோடு அவர் செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

    பெண் எஸ்.பி.யை சுங்கச்சாவடியில் வழி மறித்ததாக மற்றொரு எஸ்.பி. இடமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இத்தகைய பாலியல் பலாத்கார நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் காவல்துறை பெண் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பெண்களுக்கு தமிழக காவல்துறை எங்கே பாதுகாப்பு அளிக்கப் போகிறது? இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிற அவலநிலையிலிருந்து காவல்துறையை மீட்க வேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

    இதில், சென்னை உயர்நீதிமன்றம் எடுத்திருக்கும் தீவிரமான நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். எனவே, பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×