search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேருந்து பணிமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.
    X
    பேருந்து பணிமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.

    திருப்பூர் மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் இயங்கவில்லை- பொதுமக்கள் பாதிப்பு

    தமிழகத்தில் இன்று அனைத்து தொழிற்சங்க போக்குவரத்து கழக பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை.
    திருப்பூர்:

    போக்குவரத்து கழகங்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும். தொழிலாளர்களின் நிலுவைகள், சட்டப்பூர்வமான ஒப்பந்தப்படியான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மற்ற துறை ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 3 நாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது.

    அப்போது ஊழியர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும். தொழிலாளர்களின் சேமிப்பு பணம் உரிய கணக்கில் செலுத்தப்படும் என எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

    ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் பிரச்சனை தீரவில்லை. மேலும் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 1-9-2019 அன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    எனவே அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும். மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும். போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தம் செய்வது என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பளம் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.

    இருப்பினும் இன்று தமிழகத்தில் அனைத்து தொழிற்சங்க போக்குவரத்து கழக பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. திருப்பூரில் 2 பணிமனைகள் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம், தாராபுரம், காங்கேயம், உடுமலை ஆகிய பணிமனைகள் முலம் 520 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 60 சதவிதம் வரை பஸ்கள் இயக்கப்படவில்லை.

    தொழில்நகரமான திருப்பூரில் பெரும்பாலான தொழிலாளர்கள் பஸ்களிலேயே பயணம் செய்கின்றனர். இந்தநிலையில் இன்று 60 சதவித அரசு பஸ்கள் இயக்கப்படாததால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

    குறைந்த அளவிலான அரசு பஸ்களே இயக்கப்பட்டதால் திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தனியார் பஸ்களில் பயணிகள் அதிகம் பேர் பயணித்தனர்.
    Next Story
    ×