search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானைகள்
    X
    யானைகள்

    புத்துணர்வு முகாம்- கோவில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

    புத்துணர்வு முகாமுக்கு அழைத்து வரப்படும் யானைகள் அனைத்திற்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டுதோறும் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், மடங்களில் உள்ள யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முகாம் தொடங்கும் தேதியை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கான அறிவிப்பை இன்னும் இரண்டு மூன்று தினங்களில் அரசு அறிவிக்கலாம் என தெரிகிறது. ஆயினும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 48 நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனப்பத்ர காளியம்மன் கோவில் பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து அங்கு முன்னேற்பாடு பணிகளையும் விரைவில் தொடங்க உள்ளோம். இந்த யானைகள் முகாம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட உள்ளது. எனவே கோவில் யானைகளை கொரோனா தொற்று பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை பின்பற்றி முகாமுக்கு அழைத்து வர தயார் நிலையில் இருக்குமாறு அந்தந்த கோவில் செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் முகாமுக்கு அழைத்து வரப்படும் யானைகள் அனைத்திற்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம். முகாமுக்கு அழைத்து வருவதற்கு முன்பு யானை கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற மருத்துவரின் எதிர்மறையான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் யானைகளுடன் முகாமிற்கு அனுப்பப்பட உள்ள பாகன்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் 24 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்த பிறகே முகாமுக்கு அனுப்ப வேண்டும். யானைகள் முகாம் நடைபெறும் இடத்திற்கு மக்களுக்கு அனுமதி கிடையாது.

    யானைகளுடன் முகாமிற்கு வரும் பாகன்கள், மருத்துவர்கள், வாகன ஓட்டுநர்கள் அனைவருமே முக கவசம் அணிந்து சீரான இடைவெளியில் கிருமிநாசினி உபயோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் யானைகளை லாரிகளில் ஏற்றுவதற்கு முன்பு லாரியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நோயுற்ற வருடாந்திர பருவகோளாறு உள்ள, தொற்று பாதிப்புள்ள, நோய் வர வாய்ப்புள்ள மற்றும் முகாமுக்கு வர மறுக்கும் யானைகளை முகாமிற்கு அழைத்து வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானைகள் முகாம் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கடந்த ஆண்டு 15. 12. 2019 முதல் 31.1.2020 வரை மொத்தம் 48 நாட்கள் நடைபெற்ற முகாமில் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகளும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து இரண்டு யானைகளும் ஆக மொத்தம் 28 யானைகள் கலந்துகொண்டு புத்துணர்வு பெற்றுள்ளன. முகாமிற்கு தமிழக அரசு ரூ.1 கோடியே 45 லட்சத்து 35 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×