search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    குமரியில் இன்றும் கனமழை- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

    தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்து வருகிறது.
    நாகர்கோவில்:

    குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக குமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்துவரும் மழையின் காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மோதிரமலை-குற்றியார் செல்லும் சாலையில் உள்ள சப்பாத்து பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது. அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் 12 மலையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வள்ளியாறு, பரளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் 2½ அடி உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.40 அடியாக இருந்தது. அணைக்கு 3,953 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் அணை நாளைக்குள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பி வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணையை கண்காணித்து வருகிறார்கள். அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.18 அடியாக உள்ளது. அணைக்கு 2113 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவிலில் இன்று காலையிலும் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தபடி இருந்தது.

    இதுபோல கொட்டாரம், அஞ்சுகிராமம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, அடையாமடை, குளச்சல், குருந்தன்கோடு, மார்த்தாண்டம், தக்கலை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள கடை வீதிகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    சாமித்தோப்பு, கோவளம் பகுதியில் உப்பளங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×