search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிமன்றம்
    X
    நீதிமன்றம்

    மனைவியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை- தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

    வேலைக்கு செல்லாமல் இருந்ததை தட்டிக்கேட்ட மனைவியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
    தேனி:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மறவப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் மகன் மணிகண்டன் (வயது 30). கார் டிரைவர். இவருக்கும், மூணாறு அருகே வட்டவடை கோவிலூர் பகுதியில் வசிக்கும், தங்கப்பன் என்பவரின் மகள் கணபதியம்மாள் (24) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு பிறகு மணிகண்டன் போடி பள்ளிவாசல் தெருவில் மனைவியுடன் குடியேறினார். இவர் அடிக்கடி மது குடித்து விட்டு, சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததை அவருடைய மனைவி தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மனைவியின் நகைகளை அடகு வைத்து மணிகண்டன் செலவு செய்தார்.

    பின்னர் கணபதியம்மாளின் பெற்றோர், அடகு வைத்த நகையை மீட்டுள்ளனர். ஆனால் அந்த நகையையும் தன்னிடம் கொடுக்குமாறு மணிகண்டன் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து அவரை கொடுமைப்படுத்தி வந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி கணபதியம்மாள், வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் தலையணையால் அவருடைய முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றார். இதில் அவர் மயங்கி விட்டார். பின்னர் மணிகண்டன் ஒரு கயிற்றால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பிணத்தை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி வீட்டுக்குள் வைத்து வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.

    5 நாட்களுக்கு பிறகு வீட்டுக்குள் இருந்த பிணம் அழுகி துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போடி நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கணபதியம்மாள் தந்தை தங்கப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர். மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த அவர் போலீஸ் தேடுவதை அறிந்து மதுரை கோர்ட்டில் சரணடைந்தார்.

    இந்த வழக்கு, தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பு கூறினார்.

    மனைவியை கொலை செய்த மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து மணிகண்டனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×