search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருஞ்சாணி அணை
    X
    பெருஞ்சாணி அணை

    பெருஞ்சாணி அணை 71 அடியை எட்டியது- குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியதையடுத்து குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாககுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    நாகர்கோவில், பூதப்பாண்டி, கொட்டாரம், மயிலாடி, குளச்சல், குழித்துறை, ஆணைக்கிடங்கு, இரணியல், தக்கலை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவும் பலத்த மழை கொட்டியது. இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.அவ்வப்போது மழை கொட்டியது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு அதிகபட்ச மாக 61.8 மி.மீ. மழை பதிவானது. திற்பரப்பு அருவி பகுதியில் மழை நீடித்து வருவதால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் கொட்டி வரும் மழையினால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1¼ அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை இன்று காலை மூடப்பட்டது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 71 அடியை எட்டியது. அணைக்கு 1974 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 71அடியை எட்டியதையடுத்து குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவை பொறுத்து கூடுதல் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 33.90 அடியாக உள்ளது. அணைக்கு 1709 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மாம்பழத்துறையாறு அணை நிரம்பியதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை பகுதியில் சூறைக்காற்றிற்கு மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்தது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×