search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜவாய்க்காலை தமிழக அரசின் குழுவினர் ஆய்வு
    X
    ராஜவாய்க்காலை தமிழக அரசின் குழுவினர் ஆய்வு

    ஆத்தூர் காமராஜர் அணை ராஜவாய்க்கால் பிரச்சினை: தமிழக அரசின் 6 பேர் குழு நேரில் ஆய்வு

    ஆத்தூர் காமராஜர் அணை ராஜவாய்க்கால் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசின் 6 பேர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
    செம்பட்டி:

    மேற்கு தொடர்ச்சி கீழ்மலை பகுதியில் பெய்யும் மழை நீர், காமராஜர் அணை ராஜவாய்க்கால் மூலம் குளங்களுக்கு செல்லும். இந்த தண்ணீரை ராஜவாய்க்காலில் விடாமல், அரசு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாற்றுப்பாதை ஏற்படுத்தி, குடகனாறு பகுதிக்கு திருப்பிவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சித்தையன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி, நரசிங்கபுரம், செங்கட்டாம்பட்டி உள்ளிட்ட 60 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தெருக்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    பின்னர், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உமா தலைமையில் அவரது அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் நிரந்தரமாக ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும் என முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்தில் அதிகாரிகளும், விவசாயிகளும் கையெழுத்து போட்டனர். மேலும் ராஜவாய்க்காலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராஜவாய்க்கால் பிரச்சினையை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, பொதுப்பணித்துறையின் ஓய்வு பெற்ற 2 அதிகாரிகள் உள்பட 6 பேர் கொண்ட வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதையடுத்து பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற தலைமை செயற்பொறியாளர் இளங்கோவன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஆத்தூர் காமராஜர் அணை அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தண்ணீர் வரும் ராஜவாய்க்காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த குழுவினரிடம், ராஜவாய்க்கால் எங்களின் உரிமை. இதனை யாருக்கும் விட்டுதரமாட்டோம் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 2 மணி நேரம் ஆய்வுக்கு பிறகு அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
    Next Story
    ×