search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட வாழைத்தார்களைபடத்தில் காணலாம்.
    X
    தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட வாழைத்தார்களைபடத்தில் காணலாம்.

    கொரோனா ஊரடங்கால் திருவிழாக்கள் நிறுத்தம்: தூத்துக்குடி மார்க்கெட்டில் வாழைத்தார் விற்பனை மந்தம்

    கொரோனா ஊரடங்கால் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டதால், தூத்துக்குடி மார்க்கெட்டில் வாழைத்தார் விற்பனை மந்தமாக உள்ளது.
    தூத்துக்குடி:

    கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்களில் ஆடி மாதத்தில் கொடைவிழாக்கள், திருவிழாக்கள் அதிகமாக நடைபெறும்.

    ஆனால் இந்த ஆண்டு கோவில் திருவிழாக்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், திருவிழாவைச் சார்ந்துள்ள தொழில்களும் முடங்கியுள்ளன.

    இதனால் தூத்துக்குடி மார்க்கெட்டில் வாழைத்தார்கள் விற்பனை மந்தமாக உள்ளது. வாழைத்தார்கள் குறைந்த விலைக்கு விற்பனை ஆவதால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர். ஆடி மாதம் கோவில் திருவிழா சீசன் என்பதால், இந்த மாதத்தில்தான் வாழைத்தார் விற்பனை அதிகமாக இருக்கும்.

    திருவிழாவிற்காக மக்கள் வாழைத்தார்களை அதிகமாக வாங்கி செல்லும்போது, நல்ல விலையும் வியாபாரிகளுக்கு கிடைக்கும். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டதால், வாழைத்தார் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.

    நேற்று தூத்துக்குடி மார்க்கெட்டில் செவ்வாழைத்தாரில் நாகர்கோவில் ரகம் ரூ.700 முதல் ரூ.800-க்கும், தேனி ரகம் ரூ.500 முதல் ரூ.600-க்கும் விற்பனையானது. இதேபோல நாட்டு வாழைத்தார் ரூ.300 முதல் ரூ.500-க்கும், கோழிக்கூடு ரூ.300 முதல் ரூ.500-க்கும், பூலாஞ்செண்டு ரூ.500 முதல் 600-க்கும், கதலி ரூ.150 முதல் ரூ.200-க்கும் விற்பனையானது.

    மேலும் வாழை இலைக்கட்டுகளும் குறைந்த விலைக்கு விற்பனையானது. இலைக்கட்டு ரூ.400 முதல் ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.
    Next Story
    ×