search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசி
    X
    காசி

    கந்துவட்டி வழக்கில் காசி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

    கந்துவட்டி வழக்கில் காசி மீது 1,250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 26), கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் பல்வேறு பெண்களுடன் பழகி நெருக்கமாக இருந்தபோது புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டார். பின்னர் அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், நாகர்கோவிலை சேர்ந்த பெண் என்ஜீனியர் மற்றும் ஒரு சிறுமி உள்பட 5 பெண்கள் தனித்தனியாக போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் காசி மீது கோட்டார், நேசமணிநகர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் போலீசார் வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காசிக்கு உடந்தையாக இருந்த நண்பர் டேசன் ஜினோ என்பவரும் கைது செய்யப்பட்டார்.

    மேலும் காசி மீது அலெக்சாண்டிரா பிரஸ் ரோட்டை சேர்ந்த டிராவிட் என்பவர் வடசேரி போலீஸ் நிலையில் ஒரு புகார் அளித்தார். அதாவது காசியிடம் தான் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதற்காக அவர் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாகவும் அதில் கூறியிருந்தார். அதோடு வாங்கிய பணத்துக்கு ஈடாக டிராவிட்டின் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளையும் காசி மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டாக புகாரில் கூறப்பட்டு இருந்தது.

    அதன்பேரில் காசி மீது கந்து வட்டி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் காசி வழக்குகள் தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். அப்போது அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. மேலும் காசியின் நெருங்கிய நண்பரும், காசியை போலவே பல பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்த தினேஷ் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து காசி மீது போடப்பட்டு உள்ள கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. இதற்காக வடசேரி போலீசார், வங்கி அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிளை காசி பெயருக்கு மாற்ற உதவி புரிந்த புரோக்கர் நாராயணன் மற்றும் காசியின் தந்தை தங்கபாண்டியன் ஆகியோர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த நிலையில் கந்து வட்டி வழக்கு தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 1,250 பக்கங்கள் கொண்ட அந்த குற்ற பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர்.
    Next Story
    ×