search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிவகாசிக்கு காலண்டர் தயாரிப்பு ஆர்டர்கள் வருவது தாமதம்

    கொரோனா பரவலால் சிவகாசிக்கு காலண்டர் தயாரிப்பு ஆர்டர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    சிவகாசி:

    சிவகாசி பகுதியில் தினசரி மற்றும் மாத காலண்டர் தயாரிக்கும் பணியில் வழக்கமாக 50-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் ஈடுபடும். ஒவ்வொரு ஆண்டும் 7-வது மாதத்தில் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் அடுத்த ஆண்டுக்குரிய காலண்டர் தயாரிப்பு தொடங்கும். ஆடிப்பெருக்கு அன்று வெளிமாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகளுக்கு அந்த ஆண்டுக்குரிய புதிய டிசைன் காலண்டர்கள் பார்வைக்கு வழங்கப்படும்.

    இதை பெற்றுக்கொள்ளும் மொத்த வியாபாரிகள் புதிய ஆர்டர்களை சிவகாசியில் உள்ள அச்சகங்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை அச்சகங்கள் கடைபிடிப்பதால் போதிய பணியாளர்கள் இல்லாமல் காலண்டர் தயாரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    ஆடிப்பெருக்கு அன்று வழக்கமாக நடைபெறும் புதிய டிசைன்கள் வெளியீட்டு விழாவும் நடக்கவில்லை. வெளியூர் வியாபாரிகள் வந்து செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளதால் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தநிகழ்ச்சியை சிவகாசி பகுதியில் உள்ள காலண்டர் உற்பத்தியாளர்கள் ரத்து செய்து உள்ளனர்.

    சிவகாசி அச்சகங்கள் வழக்கமாக ஜூன் மாதங்களில் காலண்டர் தயாரிப்பை தொடங்கி நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய காலண்டர்களை மொத்த வியாபாரிகளுக்கு வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது 50 சதவீத பணியாளர்களை கொண்டே அச்சகங்கள் இயங்கி வருவதால் உற்பத்தி பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கற்பகா ஜெயசங்கர் கூறியதாவது:-

    காலண்டர் தயாரிப்பில் இந்த ஆண்டு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பணிகள் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம், தேவையான பணியாளர்களை வைத்து பணி செய்ய முடியாதநிலை மற்றும் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றுவதால் இதுவரை முதல் கட்டபணிகளில் 10 சதவீத பணிகளே முடிந்துள்ளன. வெளியூர் வியாபாரிகள் சிவகாசிக்கு வந்து செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளதால் ஆர்டர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் கொரோனா பரவல் தடுக்கப்பட்டு சகஜநிலைக்கு வந்தால் மட்டுமே வழக்கமான உற்பத்தியில் நாங்கள் ஈடுபட முடியும். அப்படி இல்லாமல் இதேநிலை தொடர்ந்தால் 30 சதவீத உற்பத்தி பாதிக்கப்படும். கடந்த காலங்களில் கடைசி நேர ஆர்டர்களை கூட டிசம்பர் மாதங்களில் வாங்கி உரிய காலத்தில் காலண்டர்களை தயாரித்து அனுப்பி வைத்தோம். ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பு இருக்காது என்றே தோன்றுகிறது. போதிய ஆட்களை வைத்து உற்பத்தியில் ஈடுபட முடியாமல் உள்ளதே இதற்கு காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×