search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை கடலில் காணப்படும் அரியவகை தேள்மீனை படத்தில் காணலாம்.
    X
    ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை கடலில் காணப்படும் அரியவகை தேள்மீனை படத்தில் காணலாம்.

    ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை கடல்பகுதியில் அரியவகை தேள்மீன் கண்டுபிடிப்பு

    ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை கடல் பகுதியில் இந்தியாவில் முதன்முதலாக அரியவகை கொடிய விஷம் கொண்ட தேள்மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய கடல்வாழ் உயிர் இனங்கள் வாழ்ந்து வருகின்றன. உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்தப்பகுதியில் அரிய பவளப்பாறைகள், மீன்கள், கடல்பாசி, கடல்புற்கள், கடல்பசுக்கள் போன்ற 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

    கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்க பூமியாகவும் மன்னார் வளைகுடா கடல்பகுதி திகழ்வதால் இது பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக இந்த பகுதியில் கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கொச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டுவரும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி ஜெயபாஸ்கரன் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடல்பகுதியில் கடலுக்குள் பவளப்பாறை போன்ற வித்தியாசமான பொருள் தென்பட்டுள்ளது. இந்த பொருள் பவளப்பாறையா, இறந்துபோன மீன் இனமா, சிப்பி இனமா என்பது போன்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது. இதனால் அதனை ஆராயும் நோக்கில் சிப்பிகள் மூலம் அந்தப்பொருளை தொட்டபோது ஆச்சரிப்படும் வகையில் நகர்ந்து சென்றுள்ளது.

    சில நொடிகளில் அந்த அரிய உயிரினம் திடீரென நிறம் மாறிக்கொண்டே இருந்துள்ளது. பழுப்பு வெள்ளை நிறத்தில் இருந்து கருமை நிறத்திற்கும் படிப்படியாக மாறிக்கொண்டே இருந்தது.

    எதிரிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள, இருக்கும் இடத்திற்கு ஏற்ற நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியை போன்ற தன்மை கொண்ட அந்த உயிரினம் குறித்து ஆய்வு செய்தபோது அது கொடிய விஷம் கொண்ட ‘ஸ்கார்ப்பியன் பிஷ்’ எனப்படும் தேள் மீன் என்பது தெரிந்தது.

    இந்தோ பசிபிக் கடல் பகுதியில் காணப்படும் இந்த தேள்மீன் இந்தியாவில் முதல் முறையாக மன்னார் வளைகுடா கடல்பகுதியில் சேதுக்கரை அருகே காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொடிய விஷம் கொண்ட இந்த தேள்மீனில், தேள்களுக்கு உள்ளது போன்ற கொடி விஷத்துடன் கூடிய கொடுக்கு போன்ற அமைப்பு உள்ளது.

    இது எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுகிறது. இந்த மீன், கொடுக்கின் மூலம் மனிதர்களை தீண்டினாலோ அல்லது மனிதர்கள் அந்த மீனை சாப்பிட்டாலோ உடனடியாக உடலில் விஷம் ஏறி உயிர் போய்விடும் ஆபத்து உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×