search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எளிய முறையில் திருமணம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    எளிய முறையில் திருமணம் நடந்தபோது எடுத்த படம்.

    ஊரடங்கு உத்தரவு எதிரொலி - 2 ஜோடிகளுக்கு எளியமுறையில் திருமணம்

    ஊரடங்கு உத்தரவு எதிரொலியால் 2 ஜோடிகளுக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமக்களின் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
    சேவூர்:

    கொரோனா வைரஸ் பரவு வதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. மேலும் திருமண நிகழ்ச்சிகளில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள் ளது.

    இந்த நிலையில் திருப்பூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி ஸ்ரீகாந்த்துக்கும், சேவூர் முதலிபாளையத்தை சேர்ந்த தேன்மொழிக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்றுகாலை அவினாசியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து, திருமணத்தை மணமகளின் வீட்டில் வைத்து எளிய முறையில் நடத்த மணமக்களின் பெற்றோர் முடிவு செய்தனர்.

    இதையடுத்து அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இது குறித்த விவரங்களை கூறி திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் மணமக்கள் வீட்டார் வேண்டுகோள் விடுத்தனர். இந்த நிலையில் நேற்றுகாலை மணமகள் வீட்டு அருகே உள்ள விநாயகர் கோவிலில் திருமணத்தை எளியமுறையில் நடத்தினர். இதில் இருவீட்டாரையும் சேர்ந்த 30 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

    இதேபோல் திருப்பூர் பாதை குப்புச்சிபாளையத்தை சேர்ந்த டயர் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரகாஷ் என்ற செல்வக்குமாருக்கும், பல்லடம் கே.அய்யம்பாளையத்தை சேர்ந்த வினோதாவுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் புத்தரிச்சல் சோழீஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு எதிரொலியால் நேற்று மிக எளியமுறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்களின் உறவினர்கள் சுமார் 25 பேர் மட்டுமே முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டனர்.
    Next Story
    ×