search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லை நகரில் தடையை மீறி சென்ற ஆட்டோ டிரைவர் உள்பட 15 பேர் மீது வழக்கு

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நெல்லை நகரில் தடையை மீறி சென்ற ஆட்டோ டிரைவர் உள்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நெல்லை:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகளை தவிர அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை.

    இருந்த போதிலும் ஒரு சிலர் வாகனங்களில் சென்றபடி இருக்கின்றனர். அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியில் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதனை மீறி யாரேனும் ரோட்டில் வந்தால் தடுத்து திருப்பி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை நகரில் மட்டும் போலீஸ் கமி‌ஷனர் தீபக்தாமோர் உத்தரவின் பேரில் 34 இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தேவை இல்லாமல் வாகனங்களில் வருபவர்களை எச்சரித்து வருகின்றனர்.

    தடையை மீறி வாகனத்தில் வந்ததாக நெல்லை நகரில் நேற்று மட்டும் 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். நெல்லை சந்திப்பு பகுதியில் மணிப்புரத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற ஆட்டோ டிரைவர் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றார். அவர்மீது சந்திப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தச்சநல்லூரில் அதிக பொதுமக்கள் கூடும்வகையில் கடைகள் நடத்தியதாக 3 வியாபாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இதேபோல் பாளையில் அளவுக்கு அதிகமானோர் கூடும் வகையில் கடையில் வியாபாரம் செய்ததாக கடையின் உரிமையாளர் மற்றும் பொருட்கள் வாங்க வந்த 5 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மேலப்பாளையத்தில் பூட்டிய கடை முன்பு நின்ற 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

    இதேபோல் இன்றும் நெல்லை மாநகர பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடையை மீறி வாகனத்தில் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
    Next Story
    ×