search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதசுவாமி கோவில் யானை மேட்டுப்பாளையத்துக்கு லாரியில் புறப்பட்ட காட்சி
    X
    ராமநாதசுவாமி கோவில் யானை மேட்டுப்பாளையத்துக்கு லாரியில் புறப்பட்ட காட்சி

    மேட்டுப்பாளையத்தில் நாளை தொடங்குகிறது யானைகள் நலவாழ்வு முகாம்

    மேட்டுப்பாளையத்தில் நாளை தொடங்கி 48 நாட்கள் நடைபெறும் யானைகள் நலவாழ்வு முகாமில் தமிழகத்தில் இருந்து 27 யானைகள் பங்கேற்கிறது.
    மேட்டுப்பாளையம்:

    தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள கோவில் மற்று மடங்களுக்கு சொந்தமான யானைகளுக்கு புத்துணர்வு முகாம் கடந்த 2003-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    ஆரம்ப காலத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் நடத்தப்பட்ட முகாம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான யானைகள் நல வாழ்வு முகாம் தேக்கம்பட்டியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் தமிழகத்தில் இருந்து 27 யானைகள் பங்கேற்கும் என தெரிகிறது.

    இதற்காக முகாம் அலுவலகம், சமையல் கூடம், உணவு அருந்தும் இடம், பாகன்கள் தங்குமிடம், மருத்துவ முகாம்கள், செட்டுகள் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது.

    யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதைகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சீரமைக்கும் பணி முடிவடைந்தது. மேலும் யானைகள் குளிப்பதற்காக ஆற்றின் கரையோர பகுதியில் ‌ஷவர் அமைக்கப்பட்டுள்ளது.

    முகாமில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலுள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளை லாரியில் ஏற்றும் பணி நேற்று மாலை தொடங்கியது. அந்தந்த கோவில்களில் சிறப்பு பூஜைக்கு பின் லாரியில் ஏற்றப்பட்ட யானைகள் மேட்டுப்பாளையம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பழனி கோவில் யானை கஸ்தூரி, ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் யானை லட்சுமி, திருவானைக்காவல் கோவில் யானை அகிலா, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் யானை ராமலட்சுமி, நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி, திருக்குறுங்குடி நம்பி கோவில் யானை வள்ளி, சுந்தரவள்ளி, சங்கரன் கோவில் யானை கோமதி, திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை, ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவிலில் இருந்து 3 யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானை முகாமிற்கு புறப்பட்டு சென்ற காட்சி

    இந்த யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக மேட்டுப்பாளையம் முகாமிற்கு வரத் தொடங்கியது. யானைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நாளை மறுநாள் மேட்டுப்பாளையம் முகாமிற்கு வருகிறது.

    யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் வனபத்ரகாளியம்மன் கோவில் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கோவில் உதவி ஆணையாளர் ஹர்ஷினி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், மற்ற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



    Next Story
    ×