search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிசி ராஜா
    X
    அரிசி ராஜா

    காட்டு யானை ‘அரிசி ராஜா’ மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

    பொள்ளாச்சி வனப்பகுதியில் கடந்த 4 நாட்களாக வனத்துறைக்கு கண்ணாமூச்சி காட்டி வந்த காட்டுயானை அரிசி ராஜா நள்ளிரவு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
    பொள்ளாச்சி:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய அர்த்தனாரிபாளையம், நவமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக அரிசிராஜா என்ற காட்டு ஆண் யானை சுற்றிதிரிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இந்த யானை 4 மாதங்களில் மட்டும் 3 பேரை கொன்றுள்ளது. 7 பேர் காயம் அடைந்தனர்.

    இதையடுத்து யானையை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து யானையை பிடிக்க அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து வனக்கால்நடை உதவி இயக்குனர் மனோகரன், வனக்கால்நடை மருத்துவர்கள் சுகுமார், கலைவாணன் ஆகிய மருத்துவ குழுவினரும், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், பொள்ளாச்சி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, வனச்சரக அலுவலர்கள் காசிலிங்கம், சக்திவேல், நவீன்குமார் உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அரிசி ராஜா யானையை பிடிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கள்கிழமை இரவும் மழை பெய்ததால் அரிசிராஜா யானை வனப்பகுதியை விட்டு வெளியில் வரவில்லை. இந்த நிலையில் அரிசி ராஜா யானையை பிடிப்பதற்கு சாடிவயலில் இருந்து கும்கி யானைகள் கலீம், பாரி ஆகியவை கொண்டுவரப்பட்டு அர்த்தநாரிபாளையம் பெருமாள் மலை அடிவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த 11-ந்தேதி இரவு கும்கி யானை பாரிக்கு மஸ்து ஏற்பட்டு மதம் பிடித்ததை தொடர்ந்து லாரியில் ஏற்றப்பட்டு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையடுத்து காட்டு யானையை பிடிப்பதற்கு டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானை கபில்தேவ் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், ஒற்றை காட்டு யானை அர்த்தநாரிபாளையம் பகுதிக்கு கடந்த 4 நாட்களாக வராமல் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தது. வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காட்டுயானை அரிசிராஜா அர்த்தநாரிபாளையத்தை அடுத்த கோபால்சாமி மலைக்கும் மேல், தாடகநாச்சி மலைப் பகுதியில் இருப்பது ட்ரோன் கேமிரா உதவியுடன் கண்டறியப்பட்டது. அரிசிராஜா யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை அர்த்தநாரிபாளையம் அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் அரிசி ராஜா யானை இருப்பது தெரியவந்தது. வனத்துறையினர் அந்த யானையை தொடர்ந்து கண்காணித்தனர். நள்ளிரவு 12 மணியளவில் ஆண்டியூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் காட்டு யானை அரிசிராஜா புகுந்தது.

    இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் நள்ளிரவு 12.30 மணிக்கு காட்டு யானை அரிசிராஜாக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதையடுத்து யானை அங்கிருந்து செல்ல முடியாமல் தடுமாறியபடி இருந்தது. பின்னர் அர்த்தனாரிபாளையம் பெருமாள்கோவில் மலையடிவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கும்கி யானைகளான கலீம், கபில்தேவை ஆண்டியூர் பகுதிக்கு அழைத்து வந்தனர். பின்னர் கலீம், கபில்தேவ் உதவியுடன் காட்டு யானை அரிசிராஜா எங்கும் நகர முடியாதவாறு நிறுத்தினர்.

    காட்டு யானை அரிசி ராஜா கும்கி கலீம், கபில் தேவ் உதவியுடன் லாரியில் ஏற்பட்ட காட்சி.

    யானையை நள்ளிரவு ஏற்றமுடியாது என்பதால் இன்று காலை காட்டு யானையை ஏற்றுவதற்காக வனத்துறையினர் லாரியை ஆண்டியூர் பகுதிக்கு கொண்டு வந்தனர். பின்னர் கும்கி யானைகளான கலீம், கபில்தேவ் மற்றும் பொக்லைன் எந்திர உதவியுடன் காட்டு யானை அரிசிராஜா லாரியில் ஏற்றப்பட்டு டாப்சிலிப்பில் உள்ள வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    பின்னர் காட்டு யானை அரிசிராஜா அங்கு கூண்டில் அடைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வளர்ப்பு யானையாக மாற்றப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். காட்டு யானை அரிசி ராஜா பிடிபட்டதை தொடர்ந்து அதனை பார்ப்பதற்காக அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். கடந்த 4 மாதங்களாக அந்த பகுதியில் சுற்றி திரிந்து விவசாய நிலங்கள் சேதம் மற்றும் உயிர் பலி ஏற்படுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜா சிக்கியது அர்த்தனாரிபாளையம், நவமலை, சேத்துமடை பகுதி மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×