search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் வீரராகவராவ்
    X
    கலெக்டர் வீரராகவராவ்

    இளைஞர்கள் தங்கள் பெற்றோரை புறக்கணிக்கக்கூடாது - கலெக்டர் வீரராகவராவ் அறிவுரை

    இளைஞர்கள் வயது முதிர்ந்த தங்களது பெற்றோர்களை புறக்கணித்திடாமல் அவர்களை பரிவுடன் அரவணைத்து வாழ வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கூறினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் சார்பாக உலக முதியோர் தின விழா நடைபெற்றது.

    இதில் கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மூத்த குடிமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து மூத்த குடிமக்களுக்கான உரிமைகளை அங்கீகரித்திடும் நோக்கத்தினை பொதுமக்களிடையே வலியுறுத்திடும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் நாள் உலக முதியோர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    மூத்த குடிமக்கள் நலனுக்காக முதியோர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்தகைய உதவித்தொகை திட்டம், பராமரிப்பு இல்லங்கள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் மூத்த குடிமக்களுக்கு அவர்களது உணர்வுகளை புரிந்துகொண்டு மதிப்புடன் நடத்தக்கூடிய உறவுமுறை பந்தங்களே முழுமையான தீர்வாக அமையும்.

    இளைஞர்கள் வயது முதிர்ந்த தங்களது பெற்றோர்களை புறக்கணித்திடாமல் அவர்களை பரிவுடன் அரவணைத்து வாழ வேண்டும்.

    அதே வேளையில் மூத்த குடிமக்களும் வயது முதிர்ந்த காலத்தில் தங்களது வயது மற்றும் தனிமை குறித்து சோர்வடையாமல் புதிய சிந்தனைகளில் தங்களை ஈடுபடுத்தி, மகிழ்ச்சியாக வாழ்ந்திட வேண்டும்.

    சரியான உணவுப் பழக்க வழக்கத்தினையும் முறையே கடைப்பிடித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) ஜெயந்தி, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் குமரகுருபரன், சமூகப்பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் சிவசங்கரன், மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு சேசுராஜ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் உள்பட அரசு அலுவலர்கள், மூத்த குடிமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×