search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரசவத்தின்போது உயிரிழந்த பிரியா
    X
    பிரசவத்தின்போது உயிரிழந்த பிரியா

    தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு சேர்ந்த பெண் உயிரிழப்பு

    தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), முடி திருத்தும் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (24). இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மஞ்சமேடு கிராமம் ஆகும். பிரியாவுக்கு ஏற்கனவே 2 மகள்கள் உள்ளனர். 3-வதாக அவர் கர்ப்பிணி ஆனார்.

    நேற்று இரவு பாரூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவ வலி வராததால் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். நேற்று இரவு 10 மணிக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று அதிகாலை 2.55 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ரத்தப்போக்கு அதிகமானது. அதிகாலை 5 மணி அளவில் அவர் இறந்துபோனார்.

    இதுகுறித்து அவரது உறவினர்களிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் பிரியாவின் பிணத்தை வாங்க மாட்டோம் என்று கூறி ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து பிரியாவின் உறவுக்கார பெண் ஒருவர் கூறியதாவது:-

    இன்று அதிகாலை பிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது பிரசவம் பார்த்த டாக்டர் எருமை மாதிரி இருக்கிறாய். குழந்தை வெளியே வர நன்றாக முக்கு என்று திட்டினார். அதன்பிறகு பிரியா இறந்துவிட்டதாக கூறி விட்டனர். பிரியாவுக்கு ரத்தப்போக்கு அதிகமாகி கிடந்த அவரை டாக்டர்களும், நர்சுகளும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டிவிட்டனர். இதனால்தான் அவர் இறந்துபோனார். அவருக்கு முறையாக சிகிச்சை அளித்து இருந்தால் அவரது உயிர் காப்பற்றப்பட்டு இருக்கும். சிகிச்சை அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பிணத்தை வாங்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

    டாக்டர்கள் போராட்டம் நடத்தினாலும் அவசர சிகிச்சைக்கு டாக்டர்கள் உடன் இருந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    நேற்று இரவு பிரசவ வார்டில் பிரியாவுக்கு பிரசவம் பார்க்கும்போது டாக்டரும், நர்சும் உடன் இருந்தனர். அதிக ரத்தப்போக்கு காரணமாகதான் பிரியா இறந்தார். டாக்டர்கள் இல்லாததால் அவர் இறந்ததாக கூறுவது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×