search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான சரக்கு ஆட்டோ கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
    X
    விபத்துக்குள்ளான சரக்கு ஆட்டோ கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    சேந்தமங்கலத்தில் விபத்து- சரக்கு ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து பெண் பலி

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இன்று காலை சரக்கு ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் ராஜபுரம், பெருமாள் கோவில் தெரு, ஆண்டித் தெரு, குழளாளர் தெரு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

    இந்த பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பலர் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வெளியூர்களுக்கு தோட்ட வேலை, வயல் வேலை, கட்டிட வேலை உள்ளிட்ட கூலிவேலைகளுக்கு செல்வதும் வழக்கம்.

    இன்று காலை இப்பகுதிகளில் உள்ள பெண்கள் 14 பேர், சேந்தமங்கலத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொட்டனம் பகுதியில் நிலக்கடலை அறுவடை செய்வதற்காக, ஒரு சரக்கு ஆடடோவில் புறப்பட்டனர்.

    சேந்தமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகில் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு ஆட்டோ ரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோவில் இருந்த ராஜபுரம் பகுதியை சேர்ந்த அந்தோணி மனைவி குழந்தை தெரசா (வயது 65), உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் ஆட்டோவில் இருந்து வெளியே வரமுடியாமல் படுகாயத்துடன் வலியால் கதறி துடித்தனர். அக்கம், பக்கத்தினர், அந்த வழியாக சென்றவர்கள், அங்கு வந்து அவர்களை மீட்டனர்.

    இதில் குழாளர் தெருவை சேர்ந்த தனம் (50) என்ற பெண் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக தனத்தை பொது மக்கள் ஒரு வாகனத்தில் ஏற்றி, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அது போல், சுலோச்சனா (60), ராணி (50), செல்லம்மா (57), சரோஜா (45), இந்திராணி (40), கந்தாயி (60) உள்ளிட்டோர் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் அடைந்தனர். அவர்கள் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்தால் சேந்தமங்கலம் -புதன் சந்தை செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சேந்தமங்கலம் போலீசார், விபத்துகுள்ளான ஆட்டோவை சாலையில் இருந்து அப்புறப்படுதி, போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதனிடையே விபத்து நடந்ததும், காயம் அடைந்தவர்களை காப்பாற்றாமல் டிரைவர் அங்கிருந்து ஓடி விட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    கூலிவேலைக்கு சென்ற பெண், சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பலியான சம்பவம் ஊரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×