search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட முருகேசன்- விவேக்
    X
    கொலை செய்யப்பட்ட முருகேசன்- விவேக்

    தூத்துக்குடி இரட்டைக்கொலையில் 2 வாலிபர்கள் கைது

    தூத்துக்குடியில் நடந்த இரட்டைக்கொலை தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிவந்தாகுளம் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). கப்பல் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி இந்திரகுமாரி டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவுக்காக அவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

    முருகேசன் கடந்த சில மாதங்களாக பணிக்கு செல்லாமல் இருந்து வந்தார். நேற்று மதியம் அவர் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். இதனை பார்த்த முருகேசன், அந்த நபரை பார்த்து, தெருவுக்குள் மெதுவாக செல்லுமாறு கூறி கண்டித்தார்.

    இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று மாலையில் முருகேசன் சிவந்தாகுளம் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அவர் அங்கு வந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனது நண்பரான பிரையண்ட்நகர் 9-வது தெருவை சேர்ந்த விவேக்(40) என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர், திடீரென முருகேசன் மற்றும் விவேக்கை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகேசன், விவேக்கை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். விவேக் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிறிது நேரத்தில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கொலையாளிகளை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை முருகேசன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், முருகேசன் மற்றும் அவரது நண்பரை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

    தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (21), பிரையண்ட் நகர் மாரிச்செல்வம் (25), அந்தோணியார்புரம் மாரிமுத்து (22), அருண், மகாலிங்கம், வேல்முருகன், முகேஷ் ஆகிய 7 பேர் சேர்ந்து முருகேசன் மற்றும் விவேக்கை வெட்டிக் கொன்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து கொலையாளிகள் 7 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் மாரிச்செல்வம், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×