search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மகன்களால் உயிருக்கு ஆபத்து - கலெக்டரிடம் மூதாட்டி கண்ணீர் மனு

    திருச்சி அருகே மூதாட்டி ஒருவர் தனது மகன்களால் உயிருக்கு ஆபத்து என கலெக்டரிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள டி.ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் அலங்காரமேரி (வயது 73). இவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    எனது சொந்த ஊர் சிறுப்பத்தூர் கிராமம். எனது கணவர் மாணிக்கம். 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கடந்த 2011-ம் ஆண்டு என்னுடைய கணவர் இறந்து விட்டார். கணவர் பெயரில் 3 ஏக்கர் மேட்டுக்காடு, அரசு வழங்கிய காலனி வீடு, குடிசை வீடு ஒன்றும் உள்ளது. எனது மகன்கள் என்னை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் சொத்துகளை அவர்களிடம் ஒப்படைத்தேன்.

    ஆனால், யாருமே என்னை கவனிக்கவில்லை. மகன் மதலைமுத்து என்னை அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு துரத்தி விட்டான். ஊர் பெரியவர்கள் பலமுறை பேசிப்பார்த்தும் பலன் இல்லை.

    இந்த கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. உயிருக்கு பயந்து எனது பூர்வீகமான டி.ரெங்கநாதபுரத்தில் உள்ள எனது தம்பி சாமிநாதன் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளேன்.

    கடந்த 5-ந்தேதி பக்கவாதம் ஏற்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் 12 நாட்கள் சிகிச்சை பெற்றேன்.

    பெற்ற பிள்ளைகளே கவனிக்காதபோது, மற்றவர்கள் எப்படி காப்பாற்றுவார்கள்?. நிர்கதியாக நிற்கும் எனக்கு, என் மகன்களிடம் ஒப்படைத்த சொத்துகளை மீட்டுத்தருவதுடன் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இறுதிகாலம் வரை என்னை கவனித்து பராமரிப்பவருக்கே கணவரின் சொத்துகள் போய்சேரும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
    Next Story
    ×