search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
    X
    உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    உளுந்தூர்பேட்டை வார சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற வாரசந்தையில் இன்று மட்டும் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரம் தோறும் புதன்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

    அங்குள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே உள்ள ஏரிக்கரையில் இந்த ஆட்டு சந்தை நடைபெறும்.

    இந்த சந்தைக்கு விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை இந்த சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவார்கள்.

    அதுபோல் ஆடுகளை வாங்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    வருகிற 12-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று உளுந்தூர்பேட்டையில் உள்ள வார சந்தைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சரக்கு வேன்களில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

    இன்று வழக்கத்தை விட அதிகமான ஆடுகள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. செம்மறி ஆடு, வெள்ளாடு போன்ற ஆடுகள் அதிக அளவில் கொண்டுவரப்பட்டன.

    இந்த ஆடுகளை வாங்க விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டகளிலிருந்து வியாபாரிகள் அதிக அளவில் அதிகாலை முதலே சந்தைக்கு வந்திருந்தனர். சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. ஆடுகளை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    ரூ. 55 ஆயிரத்துக்கு விலைபோன ஜமுனாபுரி ஆடு


    தியாகதுருகத்தை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் ஜமுனாபுரி என்ற உயர்ரக ஆட்டை விற்பனைக்கு கொண்டுவந்தார். இந்த ஆடு 100 கிலோ எடை கொண்டதாகும். இந்த ஆட்டை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்க முயன்றனர். கடைசியில் இந்த ஆடு ரூ.55 ஆயிரத்துக்கு விலைபோனது.

    உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற வாரசந்தையில் இன்று மட்டும் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஆடுகளை வாங்கியவர்கள் வேன் மற்றும் டெம்போக்களில் தங்கள் ஊருக்கு கொண்டுசென்றனர்.
    Next Story
    ×