search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு- சிபிசிஐடி பெண் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை தொடங்கினார்
    X

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு- சிபிசிஐடி பெண் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை தொடங்கினார்

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா இன்று விசாரணை தொடங்கினார். #PollachiAbuseCase #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சியில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமான மாணவியை, ஒரு கும்பல் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு(26), என்ஜினீயர் சபரிராஜன்(25), ஜவுளிக்கடை உரிமையாளர் சதிஷ் (29), வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும், புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை தாக்கி மிரட்டியதாக பார் நாகராஜ், பாபு, செந்தில், ஆச்சிப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கும்பலின் பின்னணியில் மேலும் சிலர் இருப்பதாகவும், அவர்களை தப்ப வைக்க போலீசார் முயற்சி செய்வதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், வக்கீல்கள் குற்றம் சாட்டினர். எனவே இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற வேண்டும், பெண் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று கோவை வந்தனர். அவர்களிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பொள்ளாச்சி போலீசார் ஒப்படைத்தனர். உடனடியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் இன்று காலை கோவை வந்தார். அவரும் பொள்ளாச்சிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

    கைதான கும்பல் கடந்த 7 வருடங்களாக 100-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த கும்பலிடம் கல்லூரி மாணவிகள் தவிர சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், கோவையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை, டாக்டர் ஒருவரின் மனைவி என பலரும் சிக்கி உள்ளனர்.

    அவர்களை அடையாளம் கண்டு, தேவையான பாதுகாப்பு கொடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தங்களிடம் சிக்கிய வசதியான பெண்களிடம் இந்த கும்பல் பணம், நகை பறித்து மோசடி செய்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் ரூ.5 கோடி வரை பெண்களிடம் இருந்து மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் முறையாக புகார் பெறுவதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த கும்பலின் பின்னணியில் மொத்தம் 20 பேர் வரை இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரிக்க, திருநாவுக்கரசு உள்பட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக கோர்ட்டு அனுமதி பெறுவதற்காக ஓரிரு நாட்களில் போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற தமிழக அரசு நேற்று பரிந்துரை செய்தது. இது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்புகிறது. அதை மத்திய அரசு ஏற்றவுடன் சி.பி.ஐ. விசாரணை தொடங்குவார்கள்.

    அதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #PollachiAbuseCase #PollachiCase #CBCID

    Next Story
    ×