search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாப்பூரில் வருமான வரித்துறை சோதனை நடந்த கட்டிடம்
    X
    மயிலாப்பூரில் வருமான வரித்துறை சோதனை நடந்த கட்டிடம்

    சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு - 76 இடங்களில் வருமான வரி சோதனை

    தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கான்வாடிகளுக்கு முட்டை வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டைகள் சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முட்டைகளை திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் காண்டிராக்ட் எடுத்து வினியோகம் செய்து வருகிறது.



    இந்த நிறுவனத்தில் இருந்து வழங்கப்படும் முட்டைகள் அரசு நிர்ணயித்த முட்டையை காட்டிலும் புல்லட் எனப்படும் குறைந்த எடையிலான முட்டைகளை வெளிமாநிலத்தில் வாங்கி வழங்குவதாகவும் இதனால் மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் கடந்த மாதம் பரபரப்பு புகார் எழுந்தது.

    மாணவர்களின் உடல் நலனுக்காக அரசு வழங்கும் முட்டையில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்றும் முறைகேட்டில் ஈடுபடும் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது கோரிக்கை விடப்பட்டது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கான்வாடிகளுக்கு முட்டை மற்றும் சத்து மாவு, பருப்பு வினியோகம் செய்யும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் சத்துமாவு தயாரிக்கும் நிறுவனத்தை வருமான வரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது போலி நிறுவனங்களை தொடங்கி அரசுக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு உள்பட பல்வேறு பொருட்கள் சப்ளை செய்தது போல கணக்கு காண்பித்து பல கோடி ரூபாய் மோசடியில் அந்த நிறுவனம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து திருச்செங்கோடு மோர்பாளையத்தில் உள்ள அந்த நிறுவனம் மற்றும் அதன் தலைமை அலுவலகத்திற்குள் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக நுழைந்தனர்.

    அந்த நிறுவனத்தின் குடோன்கள், உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் வீடுகளிலும் வருமானத்துறையினர் நுழைந்து அங்குள்ள ஒவ்வொரு அறைகளையும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். திருச்செங்கோடு அருகே உள்ள மோர்பாளையத்தில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.

    சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்தனூர் பேரூராட்சி ஆகிபாளையம் பகுதியில் உள்ள அதன் தொடர்பு நிறுவனத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல் வேப்பநத்தம், காதபள்ளி, கருப்பட்டி பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கம்பெனிகளிலும் சோதனை நடந்து வருகிறது.

    மேலும் அதன் தொடர்பு நிறுவனங்கள் உள்ள சென்னை, நாமக்கல் உள்பட தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    திருச்செங்கோடு நிறுவனத்தை போல மேலும் 2 நிறுவனங்களும் சத்துணவு முட்டை, சத்துமாவு உள்ளிட்டவைகளை வினியோகம் செய்து வருகிறது. அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

    மயிலாப்பூர் தெப்பக்குளம் அருகில் உள்ள நிறுவனத்தில் இன்று காலையில் இருந்து 5-க்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகம் முழுவதும் இந்த 3 நிறுவனங்களுக்கும் சொந்தமான 76 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று நடைபெற்று வரும் இந்த சோதனையில் சுமார் 500 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் பரபரப்பு நிலவியது.

    இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். முட்டை வினியோகத்தில் முறைகேடு, வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடியாக புகுந்து இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தவும் வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 70 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவைகளை ஆய்வு செய்து முறைகேடு மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வருமானவரித் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×