search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் தினகரன் இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணம்
    X

    தஞ்சை மாவட்டத்தில் தினகரன் இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணம்

    மக்கள் சந்திப்பு பயணத்தை தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் இருந்து தினகரன் மக்களை சந்தித்து பிரசாரத்தை தொடங்குகிறார்.
    தஞ்சாவூர்:

    ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரன் கடந்த மாதம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    இந்த நிலையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் தனி கட்சி தொடங்கி தேர்தலை சந்திப்பது குறித்து அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு தமிழகம் முழுவதும் தினகரன் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க முடிவு செய்துள்ளார்.

    அதன்படி இன்று (2-ந் தேதி) முதல் தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் தினகரன் மக்களை சந்தித்து பிரசாரத்தை தொடங்குகிறார். இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை 9 இடங்களில் அவர் பேசுகிறார்.

    நாளை (3-ந் தேதி) காலை அண்ணா நினைவு நாளையொட்டி தஞ்சையில் அண்ணா சிலைக்கு தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று மாலை அணிவிக்கிறார்.

    தொடர்ந்து நாளை மாலை முதல் கும்பகோணம் தொகுதியிலும், 4-ந் தேதி மாலை பாபநாசம் தொகுதியிலும், 5-ந் தேதி மாலை திருவையாறு தொகுதியிலும் தினகரன் மக்கள் சந்திப்பு பயணம் செய்கிறார். இதில் அந்தந்த தொகுதிகளில் பொது மக்களை சந்தித்தும், குறைகளை கேட்டும் பிரசாரம் செய்கிறார். இந்த தொகுதிகளில் இரவு 9 மணி வரை பிரசாரம் செய்கிறார்.

    இதன்பிறகு 10-ந் தேதி முதல் 2-வது கட்டமாக தஞ்சை தெற்கு மாவட்ட தொகுதிகளில் தினகரன் பிரசாரம் செய்கிறார்.

    அதன்படி 10-ந் தேதி தஞ்சை தொகுதியிலும், 11-ந் தேதி ஒரத்தநாடு தொகுதியிலும், 12-ந் தேதி பட்டுக்கோட்டை தொகுதியிலும், 13-ந் தேதி பேராவூரணி தொகுதியிலும் தினகரன் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்கிறார்.

    தஞ்சை மாவட்டத்தில் தினகரன் அதிரடியாக மக்கள் சுற்றுப்பயணத்தை முதல் இன்று தொடங்கியுள்ளது அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஆங்காங்கே வரவேற்பு பேனர்களை வைத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×