search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 48 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 48 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகிறது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு மற்றும் தொப்பையாறு மற்றும் ஒகேனக்கல் சுற்று வட்டார பகுதிகளிலும் காவிரி ஆற்றில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது.

    இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருபுறங்களையும் தொட்டப்படி தண்ணீர் சீறிப்பாய்ந்து வருகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தெளிந்த நீராக ஓடிக்கொண்டிருந்த ஒகேனக்கல் காவிரி ஆறு தற்போது புது வெள்ளத்தால் தண்ணீர் செந்நிறமாக மாறி அங்குள்ள அருவிகளில் நுங்கும் நுரையுமாக கொட்டுகிறது.

    நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 17 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீர் படிப்படியாக உயர்ந்து நேற்று பிற்பகல் 27 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்தது.

    இன்று காலை இது 48 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒனேக்கல் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவியில் தண்ணீர் அதிக அளவு கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று காலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பரிசல்கள் இயக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    ஒனேக்கல் ஐந்தருவி பகுதியில் பாறைகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் கொட்டுகிறது.

    ஒகேனக்கல் தொங்கு பாலமும் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அருவி பக்கம் செல்லாமல் இருக்கும் வகையில் ஊட்டமலை, பரிசல்துறை, முதலைப் பண்ணை, பெங்களூரு ஜால், கோத்திக்கல் ஆகிய இடங்களில் தீயணைப்பு துறையினரும், போலீசாரும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீரவரத்தை ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் நீர்ப் பாசனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    நேற்று முன்தினம் காலை 14 ஆயிரத்து 774 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 21 ஆயிரத்து 648 அடியாக அதிகரித்தது. இன்று காலை இது 33 ஆயிரத்து 569 கன அடி யாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் 82.83 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் நேற்று காலை 84.52 அடியாக உயர்ந்தது. இன்று காலை நீர்மட்டம் 87.10 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4½ அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நீர்வரத்து இதேபோல் நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வழக்கமாக நீர்மட்டம் 90 அடியை தாண்டும் போது பாசனத்திற்காக அணை திறக்கப்படும். நாளை நீர்மட்டம் 90 அடியை தாண்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் சம்பா சாகுபடிக்கு இன்னும் சில நாட்களில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×