search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜதுரை
    X
    ராஜதுரை

    தமிழக ராணுவ வீரர் குண்டு பாய்ந்து மரணம்

    லக்னோவில் பணியில் இருந்தபோது சந்தவாசல் ராணுவ வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து மர்மமான முறையில் இறந்தார்.
    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் கட்டி பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். இவருடைய மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு சுமதி (வயது 27), செல்வி (24) என்று 2 மகள்களும், ராஜதுரை (22) என்ற மகனும் இருந்தனர்.

    மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ராஜதுரை டிப்ளமோ முடித்துவிட்டு கடந்த 2014-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது லக்னோ பரேலி கேம்ப்பில் ராஜதுரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

    கேம்ப்பில் ராஜதுரை உள்பட மொத்தம் 6 ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் இருந்தனர். அப்போது 5 வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு வெளியே சென்றனர். கேம்ப்புக்குள் ராஜதுரை மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர், துப்பாக்கி பாதுகாப்பு மற்றும் போன் அழைப்புகளை கவனித்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் கேம்புக்குள் இருந்து திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

    வெளியே இருந்த சக ராணுவ வீரர்கள் அலறி அடித்துக் கொண்டு உள்ளே ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது, ராஜதுரை மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மூச்சு பேச்சின்றி சுருண்டு விழுந்து இறந்து கிடந்தார்.

    டாக்டர்கள் பரிசோதனையில் ராஜதுரை இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜதுரை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராஜதுரையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதையடுத்து ராணுவ விமானம் மூலம் சென்னைக்கு உடல் இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த கிராமமான சந்தவாசல் கட்டி பூண்டி கிராமத்திற்கு உடல் வந்து சேர்ந்தது.



    குண்டு பாய்ந்து இறந்த ராஜதுரையின் உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கட்டி தழுவி கதறி அழுதனர். இன்று மாலை அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ மரியாதையுடன் ராஜதுரையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. ராஜதுரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை. அவரது சாவில் மர்மம் உள்ளது. உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ராஜதுரையின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×