search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமக்குடி அருகே அரசு பஸ்கள் மோதல்: 2 பேர் பலி
    X

    பரமக்குடி அருகே அரசு பஸ்கள் மோதல்: 2 பேர் பலி

    பரமக்குடி அருகே அரசு பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

    பரமக்குடி:

    மதுரையில் இருந்து ராமேசுவரத்திற்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை டிரைவர் மதிப்பெருமாள் ஓட்டிச்சென்றார்.

    காலை 8.30 மணியளவில் பரமக்குடி அருகே உள்ள சுந்தரநேந்தல் விலக்கு பகுதியில் பஸ் சென்றபோது, முன்னால் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது. எதிர் பாராதவிதமாக அந்த மோட்டார் சைக்கிள் சரிந்து விழுந்தது. இதனால் அரசு பஸ்சின் டிரைவர் மதிப் பெருமாள் திடீர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார்.

    அந்த நேரத்தில் எதிரே, ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரி சென்ற அரசு பஸ் வந்தது. மதுரை பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால், அதன் பக்க வாட்டு பின்புறத்தில், கன்னியாகுமரி பஸ் மோதியது.

    இந்த விபத்தில் மதுரை பஸ்சின் பின்பகுதி பலத்த சேதம் அடைந்தது. விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.

    இந்த விபத்தில் மதுரை பஸ்சில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பரமக்குடி தாலுகா போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் பலியானவர்களில் ஒருவரது பெயர் செல்வம் என்பதும் இளையான்குடி கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மற்றொருவரின் பெயர் தெரியவில்லை 35 வயது மதிக்கத்தக்க அவரது உடல் அருகே ஒரு செல் போன் கிடந்துள்ளது. அதில் உள்ள எண்களை தொடர்பு கொண்டபோது அந்த செல்போன் காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்த நாகராஜன் (30) என்பவருடையது என போலீசாருக்கு தெரிய வந்தது. இருப்பினும் அந்த செல்போன் பலியானவர் கொண்டு வந்ததுதானா? அவர் நாகராஜன் தானா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தில் மதுரை பஸ்சில் வந்த பரமக்குடியை சேர்ந்த லட்சுமணன் (48) கன்னியாகுமரி பஸ் டிரைவரான ராமநாதபுரம் மணிமாறன், பூபதி (23), ராஜேஸ்வரி ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களில் லட்சுமணன் கை, தோள்பட்டையில் இருந்து இறங்கியதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளில் சென்ற சுந்தரனேந்தலை சேர்ந்த இதயபெருமாள், கோவிந்தன் ஆகியோரும் காயத்துடன் மிட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×