search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா நீண்ட நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டும்: அப்பல்லோ ஆஸ்பத்திரி அறிக்கை
    X

    ஜெயலலிதா நீண்ட நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டும்: அப்பல்லோ ஆஸ்பத்திரி அறிக்கை

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா படிப்படியாக குணம் அடைந்து வருகிறார் என்றும், நீண்ட நாட்கள் ஆஸ்பத்திரியில் அவர் தங்கி இருக்க வேண்டும் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி தெரிவித்துள்ளது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து நேற்று இரவில் அப்பல்லோ ஆஸ்பத்திரி வெளியிட்ட மருத்துவக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முதல்-அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைகிறது. தேவையான ‘ஆன்டிபயாடிக்’குகள், சுவாச உதவி மற்றும் அதனுடன் தொடர்புடைய முழுமையான மருத்துவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தீவிர சிகிச்சை நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், மூச்சுவிடுதல் தொடர்பான நிபுணர்கள், தொற்று கிருமி நோய் நிபுணர்கள், நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்கள் கொண்ட டாக்டர்கள் குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். விரிவான பரிசோதனை கூடம் மற்றும் கதிர்வீச்சு (ரேடியாலஜி) ஆய்வுகளை டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிபுணர்கள் நுரையீரல் மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் ஜி.கில்நானி, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைத்துறை பேராசிரியர் டாக்டர் அஞ்சன் டிரிக்கா, இதய நோய் சிகிச்சைத்துறை பேராசிரியர் டாக்டர் நிதிஷ்நாயக் ஆகியோர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து 5-ந்தேதி அன்று(நேற்று முன்தினம்) அப்பல்லோ ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர்களுடன் நீண்ட ஆலோசனை நடத்தினார்கள்.

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிபுணர்கள் குழு முதல்-அமைச்சரை பரிசோதித்து தற்போது அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் தொடர்பாக ஒரே மாதிரியான கருத்துகளை கொண்டு இருக்கிறார்கள். எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிபுணர்கள் குழு 7-ந்தேதியும்(இன்று) இங்கே தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள்.

    கடந்த 30.9.2016 அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பரிசோதித்து நிலைகளை ஆய்வு செய்த சர்வதேச மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே 6-ந்தேதி (நேற்று) முதல்-அமைச்சரை மருத்துவ பரிசோதனை செய்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருக்கும் நீண்டகால நீரிழிவு நோய் மற்றும் மோசமான பருவநிலை மாற்றத்தின் போது ஏற்படும் குளிர்கால சளி தொந்தரவை கருத்தில் கொண்டும் அப்பல்லோ ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர்கள் குழுவினர் நடத்திய ஆலோசனை, பரிசோதனை அடிப்படையில் விரிவான மருத்துவ நிர்வாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    தற்போது சிகிச்சை முறையில் சுவாச உதவி, மூச்சுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கும் சிகிச்சை, நுரையீரல் சளிகளை அகற்ற மருந்துகள், ஆன்டிபயாடிக், ஊட்டச்சத்துகள், பொதுவான நர்சிங் உதவி மற்றும் மருத்துவ உதவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அனைத்து மருத்துவ நிபுணர்களின் ஒருமித்த கருத்து என்பது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இப்போது அளிக்கப்படும் சிகிச்சை முறையை தொடர வேண்டும். முதல்-அமைச்சர் மேலும் நீண்ட நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

    இவ்வாறு மருத்துவக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×