search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்த எய்ம்ஸ் டாக்டர்கள்
    X
    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்த எய்ம்ஸ் டாக்டர்கள்

    எய்ம்ஸ் டாக்டர்கள் குழு லண்டன் டாக்டருடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை

    டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ் டாக்டர்கள் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவுடன் இணைந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. வழக்கம்போல், ஆஸ்பத்திரி முன்பு தொண்டர்கள் கூட்டமும் நிரம்பி வழிந்தது.
    சென்னை:

    டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ் டாக்டர்கள் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவுடன் இணைந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. வழக்கம்போல், ஆஸ்பத்திரி முன்பு தொண்டர்கள் கூட்டமும் நிரம்பி வழிந்தது.

    காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந்தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, அவர் சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் அவருக்கு தொடர் சிகிச்சை நடந்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சோகத்தோடு ஆஸ்பத்திரி முன்பு தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர்கள் டாக்டர் கில்நானி (நுரையீரல் சிகிச்சை நிபுணர்), டாக்டர் அஞ்சன் டிரிக்சா (மயக்கவியல், தீவிர சிகிச்சை நிபுணர்), டாக்டர் நிதீஷ் நாயக் (இதய சிகிச்சை நிபுணர்) ஆகியோர் சென்னை வந்து, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவுடன் இணைந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டனர்.

    நேற்று காலை 11 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். மதியம் 1 மணி வரை ஆஸ்பத்திரியில் இருந்த அவர்கள் பின்னர் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து, மாலை 6.15 மணிக்கு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்த அவர்கள் ஜெயலலிதா உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பரிசோதனை மேற்கொண்டனர். சுமார் 45 நிமிடங்கள் அங்கிருந்த அவர்கள் இரவு 7 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சென்றனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனர் அமீர், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள் உள்ளிட்டோர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து அங்கு இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரித்து சென்றனர்.
    Next Story
    ×