search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
    X

    கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

    கூடங்குளம் 2-வது அணு உலையில் ஆய்வு பணிகள் நடப்பதால் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யநாட்டு நிதி உதவியுடன் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல் அணு உலையில் 2014-ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது முதல் அணு உலையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்பிற்கு அனுப்பட்டு வருகிறது. முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கி 2 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி நாட்டு மக்களுக்கு அர்பணிக்கப்பட்டது.

    இந்நிலையில் 2-வது அணு உலையில் கடந்த மாதம் 29-ந் தேதி மின் உற்பத்தி தொடங்கி சோதனை அடிப்படையில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வந்தது. அதிக பட்சமாக 300 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கப்பட்டு நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பபட்டது.

    முதலில் மின்சாரம் தயாரிக்கும் போது அடிக்கடி ஆய்வுக்காக மின் உற்பத்தி நிறுத்தம் செய்து மீண்டும் உற்பத்தி செய்வது வழக்கம். இந்நிலையில் தற்போது கூடங்குளம் அணுமின் நிலைய 2-வது அணுஉலையில் மின்சாரம் தயாரிப்பது நிறுத்தப்பட்டது. டர்பைன் இயக்குவதும், அணுப்பிளவும் நிறுத்தப்பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது.

    இந்த ஆய்வுகள்ஒருவாரம் நடத்தப்படும் என்று கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் கூறினர். நீராவி வால்வுகள், அணு உலையை நிறுத்தும் வால்வுகள் போன்றவை எப்படி செயல்படுகின்றன என்று இந்த ஆய்வில் கண்டறிவார்கள். ஆய்வுப் பணிகள் முடிந்ததும் மீண்டும் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி செய்யப்படும்.

    அப்போது 300-க்கும் அதிகமாக 600 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படும். இன்னும் 3 மாதத்திற்குள் கூடங்குளம் 2-வது அணு உலையிலும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×