search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெமிலி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆசிட் வீச்சு: 2 பேர் கைது
    X

    நெமிலி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆசிட் வீச்சு: 2 பேர் கைது

    நெமிலி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெமிலி:

    நெமிலி அடுத்த சிறுணமல்லி கிராமத்தில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அன்று இரவு 12 மணியளவில் நாடகம் நடைபெற்றது.

    பொதுமக்கள் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, புதேரி கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 26) என்பவர் பைக்கில் நாடகம் நடைபெற்ற இடத்தின் அருகே அடிக்கடி வந்துசென்றுள்ளார்.

    இது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அசோக்குமாரை மடக்கி அவருடைய பைக்கை வாங்கி வைத்துக் கொண்டு மறுநாள் காலையில் வந்து வாங்கிச் செல்லுமாறு கூறினர்.

    உடனே அவர் அங்கிருந்து புதேரி கிராமத்திற்கு சென்று 10-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்துள்ளார். அவர்கள் சிறுணமல்லி கிராமத்தில் நாடகம் பார்த்து கொண்டிருந்த பொதுமக்களுடன் தகராறு செய்து பைக்கை பெற்று சென்றனர். ஆனாலும் அசோக்குமாருக்கு ஆத்திரம் தீரவில்லை.

    தனது பைக்கை பறித்து அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க நினைத்தார். இதனால் பைக்குகளில் தனது நண்பர்களுடன் நாடகம் நடைபெற்ற இடத்திற்கு மீண்டும் வந்தார். அப்போது பாட்டிலில் கொண்டு வந்த ஆசிட்டை கூட்டத்தின் நடுவே வீசியுள்ளார்.

    ஆசிட் பாட்டில் தரையில் விழுந்து உடைந்து அதில் இருந்து புகைமூட்டம் ஏற்பட்டது. பாட்டிலில் இருந்து சிதறிய ஆசிட் பொதுமக்களின் மீது பட்டது. இதில் சிறுணமல்லி கிராமத்தை சேர்ந்த ஜெயலலிதா (40), மோனிஷா(20), மீனாட்சி (35), ஜெயம்மாள் (60), சங்கீதா (35), சதீஷ்குமார் (36), சபரிநாதன் (26), அய்யப்பன் (36) ஆகிய 8 பேர் காயமடைந்தனர்.

    மேலும் அவர்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து ஆசிட் வீசிய புதேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மண்ணுகான் மகன் பிரேம்குமார் (வயது 22), பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த கன்னியப்பன் மகன் வினோத்குமார் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான அசோக்குமார் உள்பட 10 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    Next Story
    ×